Home One Line P1 “சீன, தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை நம்பிக்கைக் கூட்டணி உறுதி செய்யும்!”- எம்.குலசேகரன்

“சீன, தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை நம்பிக்கைக் கூட்டணி உறுதி செய்யும்!”- எம்.குலசேகரன்

850
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய வகை பள்ளிகளில் சீனம் மற்றும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதை சவால் செய்து வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த வழக்கை எதிர்த்து, அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

அமைச்சரவை ஒருமனதாக இந்த முடிவினை ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் மத்திய அரசு மற்றும் கல்வி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உயர்நீதிமன்றத்தில் சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்தது தொடர்பில், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து, வழக்கறிஞர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதுஎன்று அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யும்.

மலேசியாவில் சீனம் மற்றும் தமிழ்பள்ளிகள் நீண்ட காலமாக இயங்கி வருகின்றன. இருப்பினும், சமீபத்தில் சிலர் அவற்றின் இருப்பை சவால் செய்ய விரும்புகின்றனர். அவர்களின் விருப்பம் எந்த நேரத்திலும் நிறைவேறாது. நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நாட்டில் இவ்விரு வகை பள்ளிகளும் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும்என்று அவர் மேலும் கூறினார்.

படம்: முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ்

கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் தனது வழக்கறிஞர் மூலம் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தேசிய வகை பள்ளிகளில் சீனம் மற்றும் தமிழ் மொழிப் பயன்பாட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி சீனம் மற்றும் தமிழ் மொழிப் பள்ளிகளின் இருப்பை சவால் செய்ய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த பின்னர் கைருல் பலரது கவனத்தை ஈர்த்தார். எவ்வாறாயினும், சவாலை தொடர கைருல் அசாமின் விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதியன்று நிராகரித்தது.