கோலாலம்பூர்: சிஞ்ஜியாங் மாகாணத்தில் சீனாவிற்கும் உய்கூர் இனக்குழுவினருக்கும் இடையில் நடுவராக இருந்து செயல்பட புத்ராஜெயா அழைப்பு விடுத்த போதிலும், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை எனும் தனது நிலைப்பாட்டை மீண்டும் மலேசியா வலியுறுத்தியது.
இருப்பினும், சின்ஜியாங்கில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை இருப்பதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நாடாளுமன்ற பதிலில் ஒப்புக் கொண்டார்.
“ஒவ்வொரு நாடும் அதன் உள் பிரச்சினைகளை வெளிநாட்டு தலையீடு இல்லாமல் தீர்க்கும் உரிமைக்காக எப்போதும் பாடுபடுகிறது.”
“சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கூர் இனம் உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் அடக்குமுறை பிரச்சனை உள்ளது. அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.”
“இருப்பினும், உய்குர் அகதிகளின் விஷயத்தில், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட அரசாங்கம் தயாராக இல்லை” என்று அவர் கூறினார்.
மலேசியா உய்கூர் அகதிகளை அழைத்துச் செல்லுமா அல்லது அவர்களை மூன்றாம் நாட்டிற்கு அனுப்புமா என்று கேட்டதற்கு டாக்டர் மகாதீர் பதிலளித்தார்.
“இவ்வாறு, பாதுகாப்புக்காக மலேசியாவுக்கு தப்பி ஓடும் உய்கூர் அகதிகள் இருந்தால், மக்கள் சீனக் குடியரசின் வேண்டுகோளை மீறி மலேசியா உய்குர் அகதிகளை ஒப்படைக்காது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.