கோலாலம்பூர்: பிடிபிடிஎன் கடன் பெற்றவர்களின் நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதில் கடந்த ஆண்டு 15 நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக 383,285.91 ரிங்கிட்டை பிடிபிடிஎன் பெற்றதாக அதன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.
தங்கள் ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக அவர்கள் இந்த நடைமுறையை செயல்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகை 30 பிடிபிடிஎன் கடன் பெற்றவர்களுக்கு பயனளித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு அரசாங்கத்தால் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இது ஒரு சிறந்த முறையாகும், ஏனெனில் வரி விலக்கு கிடைப்பது எளிதான காரியம் அல்ல. உண்மையில், இந்த சலுகைகள் 2021 வரை தொடர்ந்து வழங்கப்படுவதால் முதலாளிகளுக்கு இது ஒரு நல்ல செய்தி” என்று அவர் நேற்று திங்கட்கிழமை கூறினார்.
எனவே, ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் கல்விக் கடனைச் செலுத்த உதவுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதே நேரத்தில் செலுத்த வேண்டிய தொகைக்கு வரி விலக்கு பெறவும் வான் சைபுல் பரிந்துரைத்துள்ளார்.