இலண்டன் – அமெரிக்கா, ஈரானுக்கிடையில் நிலவி வரும் பதட்டம் உலக அரங்கில் எண்ணெய் விலையை அதிகரிக்கச் செய்துள்ளது. செப்டம்பருக்குப் பின்னர் முதன் முறையாக எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 70 டாலராக இலண்டன் சந்தையில் உயர்ந்தது.
ஈரானின் முக்கிய இராணுவத் தளபதிகளில் ஒருவர் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தும், ஈரானும், அமெரிக்காவும் எதிரெதிர் சவால்கள் விடுத்து வருவதாலும், மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமும், நெருக்கடிகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் நிலவுவதால், எண்ணெய் விலைகள் உயர்வு காண்பதாக வணிக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இன்று திங்கட்கிழமை 1.4 விழுக்காடு வரையில் எண்ணெய் விலை உயர்வு கண்டது.
சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளிலும், இராணுவப் பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்ததும், மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டதற்கான காரணங்களுள் ஒன்றாகும்.
உலகின் தேவையில் மூன்றில் ஒரு பகுதி எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எடுக்கப்படுகிறது.
அதிகபட்சமாக பீப்பாய் ஒன்றுக்கு 70.74 டாலர் வரை இன்றைய சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தது.