சானா (ஏமன்) : ஏமனின் இயங்கும் ஹவுத்தி தீவிரவாதிகள் தொடர்ந்து செங்கடல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தி வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பிரிட்டனும் கடுமையான பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.
நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 3) ஹவுத்தி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் மரணமடைந்தனர். பலர் காயமடைந்தனர்.
ஹவுத்தி தீவிரவாதிகள் இயங்கும் 10 இடங்களில் உள்ள 30 மையங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களில் நிலத்தடியில் ஹவுத்தி தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்ட கிடங்குகளும், மற்ற ஆயுதங்களும் அழிக்கப்பட்டன எனவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்களில் ஆஸ்திரேலியா, பஹ்ரேய்ன், கனடா, டென்மார்க், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகியவையும் இணைந்துள்ளன.
ஹவுத்தி தீவிரவாதிகள் இயக்கம் என்பது அன்சார் அல்லா என்றும் அழைக்கப்படுகிறது. ஷியா இஸ்லாமிய தீவிரவாதிகளையும், இராணுவத்தையும் கொண்ட இந்த அமைப்பு 1990-ஆம் ஆண்டுகளில் உருவானது. சைடி ஷியாஸ் என்ற பிரிவினரை பெரும்பாலோரோகக் கொண்டு இந்த இயக்கம் இயங்குகிறது. ஹவுத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்தில் அதிக அளவில் இணைந்து போராடுவதால் அந்தப் பெயரிலேயே இந்தக் குழு அழைக்கப்படுகிறது.