கோலாலம்பூர்: 2020-ஆம் ஆண்டுக்கான 300 ரிங்கிட் பிஎஸ்எச் உதவித் தொகை ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெறுனர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உண்மையாகவே தகுதியுடைய குறைந்த வருமானம் கொண்ட குழு (பி40), இம்முறை உதவித் தொகைகளை பெறுவதில், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த நிதி விநியோக செயல்முறைப்படுத்தப்படும் என்று அது தெரிவித்தது.
“ஒரு வீட்டுக்கு 300 ரிங்கிட் என்ற அடிப்படையில், வங்கி கணக்குகளுக்கு இத்தொகை நேரடியாகச் செலுத்தப்படும்.” என்று நிதி அமைச்சகம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில், கிட்டத்தட்ட 3.8 மில்லியன் பெறுநர்கள் பயன் பெற உள்ளனர்.
“2020-ஆம் ஆண்டுக்கான பிஎஸ்எச் திட்டம் உண்மையிலேயே தகுதியுள்ளவர்களை இலக்காகக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய, இத்தொகைக்கு விண்ணப்பிக்க மற்றும் தகவல்களை புதுப்பிக்க வருகிற பிப்ரவரி 1 முதல் மார்ச் 15 வரை அவகாசம் வழங்கப்படும்.”
“2020 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருமணம் ஆகாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.