ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் ஏ வகை சளிக்காய்ச்சலால் (இன்ப்ளூயன்சா ஏ) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது 53-ஆக அதிகரித்துள்ளது என்பதை பினாங்கு மாநில கல்வித் துறை (ஜேபிஎன்) உறுதிப்படுத்தியுள்ளது.
அதன் இயக்குனர் அப்துல் ரஷீட் அப்துல் சாமாட், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்தபோதிலும், எந்தவொரு வகுப்புகளும் நிறுத்தப்படவில்லை என்றும், பள்ளிகள் மூடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
45 ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஒன்பது இடைநிலைப் பள்ளி மாணவர்கள் தற்போதைக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாநிலக் கல்வித் துறை, மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவதன் மூலம் சளிக்காய்ச்சல் கிருமி பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருமல், காய்ச்சல், தலைவலி மற்றும் தொண்டை புண் போன்ற மருத்துவ அறிகுறிகளைக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காய்ச்சலைத் தடுக்க மூக்கு கவசத்தை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், நேற்று வியாழக்கிழமை சைபர்ஜெயா மற்றும் கிள்ளானிலும் ஏ வகை சளிக்காய்ச்சல் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.