Home One Line P2 ஜனவரி 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்

ஜனவரி 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்

834
0
SHARE
Ad

இலண்டன் – நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 9) பிரிட்டனின் புதிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் வரலாற்று பூர்வ மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. அதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறி புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 330 வாக்குகள் கிடைத்த நிலையில் எதிராக 231 வாக்குகள் விழுந்தன. கடந்த பொதுத் தேர்தலில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (படம்) தலைவராக உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து இந்த நாடாளுமன்ற வெற்றியும் சாத்தியமாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து வந்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

#TamilSchoolmychoice

28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடைமுறைகளை நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்ட மசோதா விவரிக்கின்றது.

3 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதங்களுக்குப் பின்னர் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்குப் பின்னர் இந்த மசோதா ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் (House of Lords) எனப்படும் பிரிட்டனின் நாடாளுமன்ற மேலவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த மேலவை மசோதாவை ஏற்றுக் கொள்வதில் தாமதம் செய்ய முடியுமே தவிர நிராகரிக்க முடியாது.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஜனவரி 31-இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்போது, அந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் முதல் நாடாக பிரிட்டன் திகழும்.