Home One Line P2 கனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

கனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

1157
0
SHARE
Ad

ஒட்டாவா (கனடா) – ஜனவரி 7 தொடங்கி 10-ஆம் தேதி வரை கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளுக்கான நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மற்றும் சபாநாயகர்களுக்கான மாநாட்டில் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

மாநாட்டின் இடைவேளைகளில் மற்ற காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்களையும் சந்தித்து அளவளாவி கருத்துப் பரிமாற்றம் செய்ததோடு, நினைவுப் பரிசுகளையும் மலேசியாவின் சார்பில் விக்னேஸ்வரன் வழங்கினார்.

அந்த வகையில் கனடா மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் இந்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்தித்து விக்னேஸ்வரன் உரையாடினார்.

#TamilSchoolmychoice

அந்த மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் கலந்துரையாடல்களிலும் பங்கு கொண்டு விக்னேஸ்வரன் உரையாற்றினார்

நாடாளுமன்ற நடைமுறைகளில் ஒரு சபாநாயகரின் பங்கு என்ற தலைப்பில் கனடாவின் மக்களவைத் தலைவர் அந்தோணி ரோட்டா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கு கொண்டு உரையாற்றிய விக்னேஸ்வரன் “சுவாரசியமான இந்தக் கலந்துரையாடலில் எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி எனது எண்ணத்தில் உதித்த கருத்துகளை முன்வைத்தேன். ஒரு சபாநாயகரின் பதவி மற்றும் அவரது அரசியல் பின்னணி என்னவாக இருந்தாலும் சபையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நடுநிலையோடு ஏற்படுத்துவது அவரது கடமையாகும் என்றும் எடுத்துக் கூறினேன்” என தனது பங்கேற்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

“ஒரு சபாநாயகரின் பார்வையும், முடிவுகளும், கருத்துகளும் சட்ட உருவாக்கத்தின் ஒரு முக்கியப் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர, அதனை அரசியலாக்கக் கூடாது. ஒரு சபாநாயகர் தனது நாற்காலியில் அமரும்போது அவர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் மாநாட்டுக் கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

கனடாவில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளுக்கான நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மற்றும் சபாநாயகர்களுக்கான மாநாட்டின் படக் காட்சிகள் சிலவற்றையும் இங்கே காணலாம்: