கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இடைக்கால கல்வி அமைச்சராக பதவி ஏற்பதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருந்தது.
அடுத்த கல்வி அமைச்சர் நியமிக்கப்படும் வரை ஜனவரி 3 முதல் டாக்டர் மகாதீர் கல்வி அமைச்சராக செயல்படுவார் என்று அமைச்சரவை கடந்த புதன்கிழமை (ஜனவரி 8) முடிவு செய்ததாக அது குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, பெரும்பாலான மக்கள் இந்த முடிவுக்கு எதிராகவும், சாதகமாகவும் கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின், கூட்டு ஒப்புதலின்படி பிரதமராக பதவி ஏற்பவர் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சைக் கொண்டிருக்கக் கூடாது என்பது முன்னதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆயினும், தற்போது, பிரதமர் துன் மகாதீர் கல்வி அமைச்சை தாம் ஏற்று வழிநடத்த இருப்பதாகக் குறிப்பிடத்ததை அடுத்து மக்கள் இது குறித்தும் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
அசிசான் அசிஸ், என்பவர், நம்பிக்கைக் கூட்டணியில் படித்தவர்களும், திறமையானவர்கள் அதிகமானோர் இருக்கையில், ஏன் பிரதமரே அப்பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, 20 மாதங்கள் கல்வி அமைச்சராக பணியாற்றி கடந்த ஜனவரி 3-ஆம் தேதியுடன் அப்பதவியிலிருந்து விலகிய டாக்டர் மஸ்லீ மாலிக்கிடமிருந்து டாக்டர் மகாதீர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து வேறு வகையான கருத்துகளும், கவலைகளும் தற்போது எழுந்துள்ளன. அதாவது, சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் இருப்பு குறித்து எதிர்மறையான எண்ணம் கொண்ட ஒருவர் தற்போது கல்வி அமைச்சராக பதவியேற்றிருப்பது அவர்களின் கவலையை மேலோங்கச் செய்துள்ளது.
முன்னதாக எதற்கெடுத்தாலும் முஸ்லிம் அல்லாதவர்களை, குறிப்பாக இந்தியர்களை தமக்கு தோன்றும் வகையில் வசைப்பாடுவதையும், அவர்களுக்கு எதிராகவும் கருத்துகள் தெரிவித்து வந்த ஒருவர், சமூகத்திற்கு அடிப்படையாக அமையும் கல்வித் துறையில் தலைமை ஏற்பது கவலை அளிக்கிறது என்று உமாவதி சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.
சீனம் மற்றும் தமிழ் வழிக் கல்வியைக் காட்டிலும், தேசியப் பள்ளிகளில் மலேசிய மக்களின் ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் என்று பிரதமர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
“என்னதான் பிரதமர் பதவியையும், கல்வி அமைச்சர் பதவியையும், துன் டாக்டர் மகாதீர் வகித்தாலும், குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள் மட்டுமே அவர் இயங்க முடியும். சீனம் , மற்றும் தமிழ்ப் பள்ளிகளை அகற்றுவது என்பது கனவிலும் நடக்காத ஒரு விசயம்” என்று லோகேஷ் கணபதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளைச் செயல்படுத்துவதில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் தலைமைக்கு கல்வி அமைச்சகம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் மகாதீர், நாட்டின் கல்வியை மாற்றுவதில் விரிவான அனுபவமுள்ள ஓர் அரசியல்வாதி என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“துன் (டாக்டர் மகாதீர்) பொறுப்பேற்பதன் மூலம், கல்வி அமைச்சின் சிறப்பையும் நாட்டின் கல்வியையும் மேம்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.