தைபே: தைவானில் தேர்தல் இன்று சனிக்கிழமை தொடங்கியது. உள்நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே ஆரம்ப முடிவுகள் அறியப்படும் என்று தைவான் மத்திய செய்தி நிறுவனம் (சிஎன்ஏ) தெரிவித்துள்ளது.
22 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட 19.31 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 70 விழுக்காட்டினர் தைபே, நியூ தைபே, டாயுவான், தைச்சுங், தைனான் மற்றும் கஹ்சியுங் ஆகிய ஆறு சிறப்பு நகராட்சிகளிலிருப்பவர்கள் என்று மத்திய தேர்தல் ஆணையம் (சிஇசி) தெரிவித்துள்ளது.
20 முதல் 23 வயதுக்குட்பட்ட மொத்தம் 1.18 மில்லியன் வாக்காளர்கள், அதாவது மொத்த வாக்காளர்களிலிருந்து ஆறு விழுக்காட்டினர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.
தைவான் முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் 17,226 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டி மூடப்பட்டவுடன் வாக்குச்சீட்டு கணக்கிடப்பட்டு மத்திய மற்றும் உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும்.
ஆளும் கட்சியான, ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (டிபிபி) தலைவர் சாய் இங்–வென்னை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான, கோமிண்டாங்கைச் சேர்ந்த (Kuomintang) ஹான் குவோ–யூ, மற்றும் மக்கள் முதல் கட்சியின் (பிஎப்பி) தலைவர் ஜேம்ஸ் சூங் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், சாய் 56.12 விழுக்காடு வாக்குகளைப் பெற்று எளிதாக வெற்றி பெற்றார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் வருகிற மே 20-ஆம் தேதி பதவியேற்பார்.