பெய்ஜிங்: சபாவிலிருந்து சீனாவின் தியான்ஜினுக்கு சென்ற மலிண்டோ ஏர் விமானத்தில் உள்ள மலேசியர்கள் உட்பட 31 பயணிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மூன்று பயணிகளுக்கு காய்ச்சல் இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, 16 மலேசியர்கள் மற்றும் பொலிவியர்கள் உட்பட அனைத்து பயணிகளும் தியான்ஜின் டோங்லியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொரொனாவைரஸ் தொற்று ஏற்பட்டதாக முதலில் உறுதிப்படுத்தப்பட்ட 71 வயதான பயணி, வுஹானில் இருந்து மலேசியாவுக்கு கடந்த ஜனவரி 19 முதல் 25 வரை பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதே காலகட்டத்தில் மலேசியாவுக்கு வருகைப் புரிந்த வுஹானைச் சேர்ந்த இரண்டு உள்ளூர்வாசிகளுக்கு இந்நோய் இருப்பதை அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
கொரொனாவைரஸ் தாக்கியிருக்கும் முன்னணி மையப்பகுதியான ஹூபேயின் தலைநகரான வுஹானிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் டோங்லி அமைந்துள்ளது.
டோங்லியில் உள்ள முழு தங்கும் விடுதிகளும் மூடப்பட்டதாகவும், 13 மருத்துவர்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் சீனா டெய்லி தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தண்ணீர், உணவு, சுகாதாரம் மற்றும் அன்றாட தேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமையன்று, கோலாலம்பூரிலிருந்து ஜெங்ஜோவுக்குச் சென்ற விமானத்தில் ஆறு மலிண்டோ ஏர் பணியாளர்கள், ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த பயணிக்கு கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.