Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : பிணை கிடையாது – பக்காத்தானின் வாக்குறுதி ஏமாற்றம் – குவியும்...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பிணை கிடையாது – பக்காத்தானின் வாக்குறுதி ஏமாற்றம் – குவியும் கண்டனங்கள்

776
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதனுக்கு பிணை (ஜாமீன்) வழங்கப்பட கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (ஜனவரி 29) மறுத்ததைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் போக்கையும், அந்தக் கூட்டணி தந்த வாக்குறுதிகள் பின்பற்றப்படாமல் மக்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியிருப்பதையும் பலரும் சாடத் தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்த காடெக் சட்ட மன்ற உறுப்பினருமான ஜி.சாமிநாதனின் பிணை கோரும் வழக்கில் கலந்து கொள்ள நீதிமன்றம் வந்திருந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு சாமிநாதனுக்கு பிணை மறுக்கப்பட்ட முடிவைக் கடுமையாகச் சாடினார்.

“சொஸ்மாவைப் பயன்படுத்தி அந்த 12 பேர்களையும் கைது செய்ததன் மூலம் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வாக்காளர்களின் நம்பிக்கையையும் அவர்களுக்குத் தந்த வாக்குறுதியையும் சிதைத்து ஏமாற்றி விட்டது. சாமிநாதனுக்கு பிணை வழங்கப்டாதது, நீதி முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதையே காட்டுகிறது” என்றும் சார்ல்ஸ் (படம்) சாடினார்.

#TamilSchoolmychoice

“இலங்கையிலேயே விடுதலைப் புலிகள் இயக்கம் இனியும் அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அதன் மூலம் அந்த 12 பேர்களையும் உடனடியாக விடுதலை செய்ய முடியும்” என்றும் சார்ல்ஸ் கூறினார்.

சொஸ்மா சட்டத்தை அந்த 12 பேர்கள் மீதும் பயன்படுத்தியிருப்பதன் மூலம் அத்தகைய சட்டத்தைப் பயன்படுத்த மாட்டோம் என வாக்காளர்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளோம் என்றும் சார்ல்ஸ் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு விரைவாக சரிந்து வருகிறது என்றும் எச்சரித்த சார்ல்ஸ், நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்றால் உடனடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறுபிள்ளைத்தனமான குற்றங்களுக்காக கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வனும் (படம்) சார்ல்ஸ் வெளியிட்ட கருத்தை ஆமோதித்ததுடன் மக்களின் ஆதரவைக் கண்டிப்பாகப் பெறக்கூடிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை எது தடுக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

சாமிநாதனுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன்?

நேற்று புதன்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அகமட் ஷாரிர் முகமட் சாலே சாமிநாதனுக்கு பிணை வழங்க முடியாது எனத் தீர்ப்பளித்தார். இந்த முடிவு நீதிமன்றத்தில் திரளாகக் திரண்டிருந்த அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது.

ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் உள்ளிட்ட பல தலைவர்கள் தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் நேற்று திரண்டிருந்தனர்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை பரிசீலனை செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் அதனால் செல்லாது என்றும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அகமட் ஷாரிர், இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கம், இன்னும் சட்டத்தின் கீழ் பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டுள்ளதால் சாமிநாதனுக்கு பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

2001-ஆம் ஆண்டு கள்ளப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கான நிதிதிரட்டுதல், சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டிருப்பதை நீதிபதி சுட்டிக் காட்டினார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான ஒரே வழி உள்துறை அமைச்சர் அந்தப் பட்டியலை மறு ஆய்வு செய்வதுதான் எனக் குறிப்பிட்ட நீதிபதி, சட்டப்படி உள்துறை அமைச்சர் 6 மாதங்களுக்கு ஒருமுறை அந்தப் பட்டியலை மறு ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இத்தகைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மலேசியாவின் பயங்கரவாதப் பட்டியலில் இன்னும் நீடிப்பதால் அதைப் பின்பற்ற வேண்டியப் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் நீதிபதி அகமட் ஷாரிர் தனது தீர்ப்பில் விளக்கியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, அந்த இயக்கம் பிறந்த நாடான இலங்கை ஆகிய வட்டாரங்களில் தடைசெய்யப்படவில்லை என்றாலும் அவை மற்ற நாடுகளின் சட்டங்கள் என்பதைத் தான் கருத்தில் கொள்வதாகவும் இதன் காரணமாக மலேசியாவில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பட்டியலைத்தான் தான் பின்பற்ற வேண்டியிருப்பதாகவும் நீதிபதி மேலும் குறிப்பிட்டார்.

சாமிநாதனுக்கு பிணையை மறுக்கும் தனது தீர்ப்பில், அவர் சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களின் தன்மை, அதற்காகக் கிடைக்கக் கூடிய நீண்ட கால சிறைத் தண்டனை போன்ற அம்சங்களையும் பரிசீலனையில் எடுத்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கும் நீதிபதி, சாமிநாதனுக்கான பிணை மனுவில் இணைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நலம் மீதான ஆவணங்களையும் தான் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும், எனினும் அவை அவருடைய உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை அல்ல என்றும், அந்த உடல்நலக் கோளாறுகளுக்கு சிறை அதிகாரிகளே போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும் என்றும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர்களும் பிணை கோரி மனு செய்திருக்கும் நிலையில், அத்தகைய பிணை மனுவை நிராகரித்திருக்கும் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக அகமட் ஷாரிர் திகழ்கிறார்.