(பிப்ரவரி 8-ஆம் தேதி 1903-ஆம் ஆண்டில் பிறந்தவர் மலேசியாவின் முதல் பிரதமரும், நமது சுதந்திரத் தந்தை எனப் போற்றப்படுபவருமான துங்கு அப்துல் ரகுமான். 6 டிசம்பர் 1990-இல் தனது 87-வது வயதில் மறைந்தார் துங்கு. அன்னாரின் பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)
இந்த மலையகத்தின் மக்களால் தேசத் தந்தை என்றும் சுதந்திர தந்தை எனவும் அழைக்கப்படுகின்ற துங்கு அப்துல் ரகுமான் மன்னர் நாயகத்தையும் மக்கள் நாயகத்தையும் இணைத்த அரசியல் பரிமாணம் ஆவார். ஆசிய மண்டலத்திலும் மேலை நாடுகளிலும் சமதருமவாதி என்று கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பாராட்டப்பட்ட இவரால், மலேசியாவின் பெருமை உயர்ந்தது உலக அரங்கில்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் கடார மண்டலத்தில் ஆட்சி செய்த இந்து-பௌத்த கூட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தவர்தான் துங்கு அப்துல் ரகுமான். இவரின் தந்தையும் கெடா மாநிலத்தின் 24-ஆவது சுல்தானுமாகிய சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷா, கெடாவின் 32-ஆவது ஆட்சியாளர் ஆவார்.
ஆரம்பத்தில் அங்கு ஆட்சி செய்த இந்து தர்பார் ராஜா வரிசையில், ஒன்பதாவது தர்பார் ராஜாதான் கெடாவின் முதல் சுல்தானாக மாறினார். அந்தக் காலக்கட்டத்தில் இந்த மண்டலத்தில் இஸ்லாம் சமய மறுமலர்ச்சி ஏற்பட்டதன் விளைவாக, 9-ஆவது இந்து மன்னர் இஸ்லாத்தைத் தழுவினார். இந்தோனேசியாவில் இருந்து வந்த ஒரு மார்க்க அறிஞர்தான் ஒன்பதாவது இந்து அரசர் முஸ்லிம் சமயத்தைத் தழுவதற்குரிய சடங்குகளை நிறைவேற்றினார். அந்த மார்க்க அறிஞர்கூட, அரபுத் தந்தைக்கும் இந்தோனேசியத் தாய்க்கும் தோன்றியவர்.
கெடா அரண்மனையில் இடம்பெறும் அரச பாரம்பரிய சடங்குகளில் இந்து, பௌத்த கலாச்சாரம் இழையோடி இருப்பதை இப்பொழுதும் காணலாம்.
அப்படிப்பட்ட வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க துங்கு அப்துல் ரகுமானின் சீரிய தலைமையில் 1957 ஆகஸ்ட் 31-இல் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற அந்நாளைய மலாயா, 1963ல் சபா, சரவாக் ஆகிய பெருமாநிலங்களை இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட மலேசியா உருவாவதற்கு அரும்பாடாற்றிய பெருந்தகை துங்கு அப்துல் ரகுமான் ஆவார்.
ம.இ.கா., ம.சீ.ச. ஆகிய இயக்கங்களின் துணை கொண்டு மலாய், சீன, இந்திய இனங்களை ஒருமைப்படுத்தி ‘அலையன்ஸ்’ என்ற கூட்டணிக் கட்சியை உருவாக்கி ஆயுதங்களுக்கு அவசியமின்றி, அரசியல் சித்தாந்த அடிப்படையில் ஆங்கிலேயர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திரத்திற்கு வழிவகுத்தவர், துங்கு அப்துல் ரகுமான்.
“அரசியல், சமயம் போன்ற தளங்களில் அனைவரிடமும் நீக்குப்போக்கான தன்மையைக் கொண்டிருந்த துங்கு அவர்கள், நாட்டில் அனைத்துத் தரப்பினரையும் சமமாகக் கருதிய தலைவர் ஆவார். முதல் பிரதமராக விளங்கிய அவரின் காலத்தில் பல இன மக்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது” என்று துங்குவின் பிறந்த நாள் தொடர்பில் அவருடன் நேரில் பழகிய டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் (படம்) அவர்கள் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
“துங்கு பிரதமராக இருந்தபோது, கெடா மாநில ம.இ.கா. துணைத் தலைவராக நான் இருந்தேன். அப்போது, கெடா மாநிலத்தில் அவர் அரசமுறைப் பயணம் மேற்கொள்ளும் பொழுதெல்லாம் துன்.வீ.தி. சம்பந்தன் அவர்களுடன் நானும் கலந்து கொள்வது வழக்கம். 1967-இல் கெடா மாநில அரசு சார்பில் நாடாளுமன்ற மேலவைக்கு உறுப்பினராக (செனட்டர்) நியமிக்கப்பட்ட என்னை, ஐ.நா. மன்றத்திற்கு மலேசிய அரசின் சார்பில் துங்கு அனுப்பி வைத்தார். அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்த துங்கு, அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவராக விளங்கினார். நாட்டின் சுதந்திர இயக்கத்தை ம.இ.கா.வின் அன்றையத் தலைவர்களான கே.இராமநாதன் செட்டியார், குண்டன் லால் தேவாசர், துன் வீ.தி.சம்பந்தன், ம.சீ.ச.வின் துன் தான் செங் லோக் போன்ற தலைவர்களுடன் வழிநடத்தி மெர்டேக்காவையும் பெற்று நாட்டின் முதல் பிரதமராக விளங்கிய துங்கு அப்துல் இரகுமான் அவர்களை அவர் பிறந்த இன்றைய நாளில் மலேசிய மக்கள் நினைவிற்கொள்வது சிறப்பு” என்று தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவருமான டான்ஸ்ரீ சோமா அவர்கள், துங்குவுடனான தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவின் எட்டு மனைவியருள் ஆறாவது மனைவியான மஞ்சலாராவிற்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர்தான் துங்கு அப்துல் ரகுமான். மன்னர் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவின் அரண்மனை வளாகத்தில் இருந்த பௌத்த ஆலயத்தில்தான் துங்குவும் அவரின் உடன் பிறப்பினரும் வசித்து வந்தனர்.
குறும்புத்தனமும் துடுக்குத்தனமும் நிரம்பிக் காணப்பட்ட சிறுவனான ரகுமானை (துங்குவை) அவரின் தாயாரால் கண்டிக்க முடியவில்லை. மலேசியாவின் நவீன தந்தை என்று கூறப்படும் துன் மகாதீரின் தந்தையான முகமட் இஸ்கந்தார் என்பார் நிறுவிய சிறிய ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்ட துங்கு அப்துல் ரகுமான் வகுப்பறையைவிட்டு அடிக்கடி ஓடி விடுவாராம்.
அதனால், ரகுமானை குடும்பத்திலிருந்து கொஞ்சகாலம் பிரித்து வைப்பது என்று பெரியவர்கள் எடுத்த முடிவின்படி பேங்காக்கில் இருந்த ‘தெப்சிரின்’ பள்ளியில் துங்கு சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு கல்வியும் சயாமிய மொழியும் போதிக்கப்பட்டனவாம். பின்னர் பினாங்கு ‘ஃப்ரி ஸ்கூலில்’ துங்கு சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிதான் துங்குவின் கல்விப் பயணத்தையே மாற்றி அமைத்தது. கல்வி கேள்விகளில் தீவிரக் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இலண்டனில் வரலாறு, சட்டம் என இரு துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற துங்கு, கூலிம், அலோர்ஸ்டார் நகரங்களில் அரசப் பணி புரிந்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் தாம் மன்னர் பரம்பரையில் தோன்றியவர் என்ற எண்ணமெல்லாம் இன்றி பொதுமக்களுடன் இயல்பாகப் பேசி பழகுவாராம். அரசப் பணியில் நெடிய அனுபவம் பெற்ற துங்கு, பின்னர் நாட்டின் விடுதலை இயக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாடு அறியும்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதும் 1950-ஆம் ஆண்டுகளில் தேயிலை, பட்டு, நவரத்தினங்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகித்த சிலோன்(இன்றைய இலங்கையின் அன்றைய பெயர்) நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட துங்கு, கொழும்பு பண்டார நாயகே விமான நிலையத்தில் இறங்கியதும், மலேசியாவைவிட சிலோன் ஐம்பது ஆண்டு கால அளவுக்கு முன்னேறி இருக்கிறதே என்று வியந்தாராம்.
இன்றோ எல்லாம் தலைகீழாக மாறிக் கிடக்கிறது.
1990-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் இயற்கை எய்திய துங்கு அப்துல் ரகுமான் 1903-ஆம் ஆண்டில் பிப்ரவரித் திங்கள் இதே நாளில் (8-ஆம் நாள்) பிறந்தவராவார். மலேசிய வரலாற்றில் அவரின் பெயர் எந்நாளும் நின்று நிலைத்திருக்கும்.