Home கலை உலகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : பாட்டாளிக்காக தாளும் கோலும் ஏந்தியவர்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : பாட்டாளிக்காக தாளும் கோலும் ஏந்தியவர்

1080
0
SHARE
Ad

(திரைப்படப் பாடல் துறையில் தனக்கென ஒரு வரலாறு படைத்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் 62-வது நினைவு நாளான இன்று (அக்டோபர் 8) அவர் குறித்த தகவல்களை செல்லியல் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நக்கீரன்)

ஏர் முனை கொண்டு நிலத்தைப் பண்படுத்தும் வேளாண் குடும்பத்தில் பிறந்து கோல் முனை கொண்டு மக்களின் மனதைப் பண்படுத்த புறப்பட்டார் ஓர் இளங்கவிமகன்.

வானத்தை நோக்கி.., வானத்தே உலாவரும் கோள்களையும் உற்றுநோக்கி வளமார்ந்த கற்பனையில் ஆழ்ந்திட்ட கவிமக்களின் நடுவே நிலத்தைப் பார்த்து நிலத்தே உலாவந்த மக்களை ஆழ்ந்து நோக்கி அவர்களிடையே காணப்பட்ட ஏற்றத்தாழ்வை மாற்ற முனைந்து தாளையும் கோலையும் ஏந்திய “மக்கள் கவி’யாம் பட்டுக்கோட்டையார்தான் அந்த இளங்கவி.

#TamilSchoolmychoice

அதற்கு முன்னம், தன் வாழ்க்கை நாடகத்தில் மேடை நடிகர், நாட்டியக்காரர், மீன்-நண்டு பிடிக்கும் தொழிலாளி, தென்னங்கீற்று வியாபாரி, மாட்டுத் தரகர் என்றெல்லாம் ஏறக்குறைய 16 வேடங்களை ஏற்றவர் இவர்.

1959-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த தங்கப் பதுமை என்னும் படத்திற்காக, அப்படத்தின் கதையை ஒட்டி

மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே

என்று தொடங்கும் பாடலை எழுதினார் பட்டுக்கோட்டையார். ஆனால், அதே ஆண்டு இதே நாளில் (அக்டோபர்-08) இவரும் 30 வயதிற்குள் அவசர அவசரமாக மண்ணுக்குள் அடங்கியது தமிழுலகம் எதிர்கொண்ட பெருந்துயரம்.

ஆம், அவருக்கு இன்று 62-ஆவது நினைவு நாள்.

ஒரு காலத்தில் நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பட்டணத்துக்கு அருகில் உள்ள, சங்கம் படைத்தான் காடு என்ற சிற்றூரில் அருணாச்சலனார்- விசாலாட்சி தம்பதியருக்கு 1930-ஆம் ஆண்டில் இளைய மகனாகப் பிறந்தார் கலியாணசுந்தரனார்.

19 வயதிலேயே கவி புனையும் ஆற்றல் பெற்ற இவர், பட்டாளிப் பெருமக்கள் பட்ட பாட்டையே திரைப்படங்களில் பாட்டாக்கினார்.

இளம் பருவத்திலேயே வறுமையையும் பசியையும் அனுபவித்த பட்டுக்கோட்டையார், முதலாளித்துவத்தை தொலைவில் இருந்தே அவதானித்தார்.

சமூக ஆர்வத்துடன் கலை நாட்டமும் இருந்ததால் கிராமத்தை விட்டு புறப்பட்ட இவர், சக்தி நாடக சபா என்னும் நாடக நிறுவனத்தில் இணைந்து, பின்னாளில் திரைத்துறை மூலம் புகழ்பெற்ற சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ.ஏ.கே. தேவர் போன்றோரின் அறிமுகத்தையும் நட்பையும் பெற்றார். குறிப்பாக, ஓ.ஏ.கே. தேவருடன் நெருங்கிப் பழகி உள்ளத்தைப் பகிர்ந்து கொண்ட இவர், பலமுறை தேவருடன் உணவையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திரைப்படத் துறை மெல்ல வளர ஆரம்பித்த நேரத்தில் நாடகத் துறை சன்னஞ்சன்னமாக நசியத் தொடங்கியது. சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாக திரைப்படமான பொழுது அதன் நடிகர்களும் ஒவ்வொருவராக திரைத்துறையில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பைத் தொடராமல் கவிபுனையும் ஆர்வத்துடன் ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

பள்ளிப்படிப்பு இல்லாமல் திண்ணைக் கல்வியை மட்டும் ஈராண்டுகளுக்கு பெற்றிருந்த இவர், 1952 இல் புதுவைக்கு பயணமானது இப்படித்தான். தொடர்ந்து பாவேந்தர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த வாய்ப்பைப் போற்றும் விதமாக பட்டுக்கோட்டையார் தன் மனைவிக்குக் கடிதம் எழுதும்பொழுதெல்லாம் தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவாராம்.

கவிஞராக உருமாறிய பட்டுக்கோட்டையார், பாட்டுக் கோட்டையாராக விரும்பி, திரைப்படப் பாடல் வாய்ப்புக்காக திரைப்பட அதிபர்களையும், இசையமைப்பாளர்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது.

அப்போது, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பாசவலை என்ற திரைப்படத்தில் பாடல் எழுத, இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதனும் இராமமூர்த்தியும்தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள்.

பாடல் எழுதுவதற்காக வந்திருந்திருக்கிறாராம் ஒருத்தர் என்ற தகவலை அறிந்து வெளியில் வந்து எட்டிப்பார்த்த விசுவநாதன், ஒல்லியான உருவத்துடனும் மெல்லிய புன்னகையுடனும் காணப்பட்ட கலியாணசுந்தரனாரைப் பார்த்துவிட்டு இராமமூர்த்தியிடம் சென்று, “இவனுக்கு சரியாக பாட்டெழுத வருமா? டியூனுக்கு ஏற்றபடி பல்லவி போடத் தெரியுமா? இந்த இளைஞரிடம் பாட்டுக்கான சரணம் சரணடையுமா என்பதெல்லாம் தெரியவில்லை என ஐயம் எழுப்பி நையாண்டி புரிந்திருக்கிறார். அதன்பின் தயக்கத்துடனும் அரை மனதுடனும் பட்டுக்கோட்டையை அணுகியிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

கதையைக் கேட்டுவிட்டு, கதைக்கேற்ற பாட்டுடன் வந்திருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கையில் இருந்த தாளை வாங்கிப் பார்த்த விசுவநாதன், அந்தப் பாடலுக்குரிய பல்லவியைக் கண்டு, சற்று அதிர்ந்து, மீண்டும் பட்டுக்கோட்டையாரை உற்றுநோக்கிவிட்டு, முதலில் கேட்டக் கேள்வி, உங்க வயது என்ன தம்பி? என்பதுதானாம்.

அத்தகைய பல்லவி இதுதான்.

‘குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்கு சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்
தட்டுப்பட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பாக்கப்போனா எட்டடி தான் சொந்தம்’.

1956-இல் வெளிவந்த பாசவலை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற “உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்” என்று தொடங்கும் பாடலுக்கான பல்லவிதான் இது. ஐந்து பாடல்களை அந்தப் படத்திற்காக இயற்றினார் கவிஞர்.

பாடல் பரவலாக மக்கள் மனதில் இடம்பெற்ற நிலையில், ஏறக்குறைய 60 வயதை எட்டிய யாரோ ஒரு கவிஞர்தான் இந்தப் பாடலை இயற்றி இருக்க முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில், 26 வயதே ஆன பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் என்னும் இளங்கவிஞர்தான் இந்தப் பாட்டை எழுதியிருக்கிறார் என்பதை அறிந்த அனைவரும் வியந்தனராம்.

‘உழைக்காமல் உண்ண எத்தனிப்பது ஏய்த்துப் பிழைப்பதற்கு சமம். உழைக்க வேண்டும். அதுவும் கூட்டாக உழைக்க வேண்டும். விளையும் நன்மையை எல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்னும் பொதுவுடைமை (கம்யூனிச)க் கொள்கையைக் கொண்ட பட்டுக்கோட்டையார். இந்த சிந்தனையை சிந்தாமல் சிதறாமல் 1958இல் வெளிவந்த அரசிளங்குமரி என்ற திரைப்படத்திற்காக எழுதிய பாடலில்..

ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலேயிருக்குது முன்னேற்றம்
எல்லோரும் பாடுபட்டா – இது
இன்பம் விளையும் தோட்டம்.. .. ..

என்ற வரிகளை பாங்குற அமைத்தார்.

29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இந்த பாமகன், தமது 28-ஆவது வயதில் இயற்றிய முத்தான வரிகள்தான் இவை.

இவருடைய பாடல்கள் பாரம்பரிய கிராமியப் பண் முறையைத் தழுவியவை. பாடல்களில் உருவத்தைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தார். குறையை சுட்டிக் காட்டிய அதேவேளை, அதற்கான தீர்வையும் தக்க முறையில் சுட்டிக்காட்டிய தீர்க்கதரிசியாக விளங்கினார் பட்டுக்கோட்டையார்.

அதேவேளை சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் நிலவிய நிறைவான தன்மையையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை, ஆவேசம் இரண்டையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார், 1955-ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றியதன்வழி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரையைப் பதித்தார்.

திரைப்பட உலகிற்காக 180 பாடல்களைத்தான் இவர் எழுதினார் என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை காலத்தால் அழியாதவை. சமூகத்தில்  இன்னமும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன அவை. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்நிலை தொடரும்.

திராவிட இயக்கத்திலும், பொதுவுடைமைக் கொள்கையிலும் ஈடுபாடு கொண்டிருந்த கலியாணசுந்தரனார், எளிய வாழ்வின் சின்னமான தோழர் ப.ஜீவானந்தத்துடன் நட்பு கொண்டிருந்தார்.

சென்னையில் ஒருமுறை அவருடன் பயணம் மேற்கொண்டிருந்த பொழுது சாலையில் குழி தோண்டப்பட்டு, அங்கு சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் அடையாளமாகவும் பயணிகளை எச்சரிக்கும் விதமாகவும் அங்கு சிவப்பு கொடி பறக்கவிடப்பட்டதாம்.

இருவருமே பொதுவுடைமை சிந்தனையாளர்கள். இதைப் பார்த்த பட்டுக்கோட்டையார், ஜீவாவிடம் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டத்தான் பொதுவுடைமைக் கட்சியினர் சிவப்புக் கொடியைப் பறக்க விடுகின்றனர் என்றால், சாலையில் இருக்கும் மேடு பள்ளத்தைக் காட்டவும் சிவப்புக் கொடியைப் பறக்க விடுகின்றனர். மொத்தத்தில் எங்கெல்லாம் ஏற்றத் தாழ்வு நிலவுகிறதோ அங்கெல்லாம் சிவப்பு கொடி பறக்கும் போலும் என்று சொன்னதும் ஜீவானந்தம் இரசித்துச் சிரித்தாராம்.

பதிபக்தி என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற

“அம்பிகையே முத்துமாரியம்மா – உன்னை
நம்பி வந்தோம் ஒருகாரியமா”

-என்று தொடங்கும் அம்மன் பாடலில்கூட

“இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு – அது
எங்க வீட்டுப்பக்கம் வந்ததுண்டா”

என்று கேட்டு பொதுவுடைமை சிந்தனையைப் புகுத்தி இருக்கிறார்.

1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்து விட்டது.

வாழ்க பட்டுக்கோட்டையார் புகழ்!

-நக்கீரன்