Home Photo News பேரறிஞர் அண்ணாவின் வருகையால் மலையகத்தில் எழுந்த தாக்கம்

பேரறிஞர் அண்ணாவின் வருகையால் மலையகத்தில் எழுந்த தாக்கம்

1396
0
SHARE
Ad

(தமிழர்களின் தலையெழுத்தையும், தமிழ் நாட்டின் அரசியல் பாதையையும் மாற்றியமைத்த தலைமகன் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாள் செப்டம்பர் 15. அதனை முன்னிட்டு எழுத்தாளர் நக்கீரன் எழுதியுள்ள இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது)

  • சோறு என்று சொன்னதற்காக வீட்டில் ‘திட்டு’ வாங்கிய மலேசியத் தலைவர்
  • அறிஞர் அண்ணாவின் வருகையால் மலையகத்தில் எழுந்த தாக்கம்

அரசியல் மேடைகளில் மெல்லிய தென்றல் வீசுவதைப் போன்று திகழ்ந்த பேரறிஞர் அண்ணா இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்காவது வாழ்ந்திருந்தால் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்தே ஒரு வழிகாட்டுத் தலைவராக விளங்கி இருப்பார்.

மருத்துவமனையில் இருந்த அண்ணாவை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சந்தித்தபோது…

அத்துடன் வட இந்தியத் தலைவர்களே பாராட்டும் தென்னிந்தியத் தலைவராக உருமாறி இருப்பார்; உயர்ந்திருப்பார் என்று தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவரும் ஐநா மன்றத்தில் மலேசியப் பிரதிநிதியாக செயல்பட்டவருமான டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அறிஞர் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது தெரிவித்தார்.

அவர் தமிழக முதல்வரான பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அறிஞர் அண்ணாவையும் உடனிருந்த கே.ஏ. மதியழகனையும் அங்கு சந்தித்த விவரத்தை டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அவர்கள் பகிர்ந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது.

#TamilSchoolmychoice

1967 மார்ச் 6-ஆம் நாளில் முதல்வராக பதவியேற்ற அண்ணா, அதற்கு ஏறக்குறைய ஈராண்டுகளுக்கு முன் மலேசியாவிற்கு வருகை தந்தபோது, மலேசியவாழ் தமிழ்ச் சமூகத்திலும் அரசியல் வட்டத்திலும் அந்த வருகை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின.

அந்த நேரத்தில் பொதுப்பணி-அஞ்சல் துறை அமைச்சராக இருந்த துன் வீ.தி. சம்பந்தனார், இந்திய சமுதாயத்தை குறிப்பாக மலேசியத் தமிழர்களை அரசாங்கத்தில் பிரதிநிதித்த ஒரு தேசியவாதியாகவும் காங்கிரஸ் இயக்கவாதியாகவும் விளங்கினார்.

ஒரு கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் மேன்மையையும் அரசியல் எல்லையைக் கடந்த அவரின் பன்முகப் பாங்கையும் தமிழ் இனத்திற்காகவும் மொழிக்காகவும் அவர் பாடாற்றிய விதத்தையும் எண்ணிப்பார்த்த துன் சம்பந்தன், அண்ணாவின்மீது பற்று கொள்ளத் தொடங்கினார். ஆனால், அந்த வேளையில் அண்ணா உயிருடன் இல்லை.

தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் காங்கிரசிற்கு எதிராக அண்ணா அரசியல் புரிந்தார் என்பது உண்மைதான். அண்ணா ஜவஹர்லால் நேருவையே எதிர்த்தார்.

அண்ணா, மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டிருந்த சமயத்தில் ‘ஸ்டேடியம் நெகாரா’ உள்அரங்கத்தில் அண்ணா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போதைய ம.இ.கா. துணைத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அண்ணாவின் வருகையின்போது பொதுவாக மலேசியத் தமிழர்கள் அண்ணாவை தேசிய அளவில் கொண்டாடி குதூகலித்தனர்.

அப்பொழுது, மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் அரசியல் ரீதியான பிணக்கு நிலவியது. மலேசிய தேசிய பாதுகாப்பு நிதியும் திரட்டப்பட்ட நேரம் அது. இந்த நிதிக்கு மலேசியத் தமிழர்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என்று பினாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்டுக் கொண்டார் அண்ணா.

தமிழகத்துடன் கலாச்சார-பண்பாட்டுத் தொடர்பை மட்டும் தற்காத்துக் கொண்டு, இந்த மண்தான் உங்களுக்கெல்லாம் தாயகபூமி என்ற உணர்வுடன் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு இங்கேயே வாழ வேண்டும் என்று அண்ணா தேசிய சிந்தனைகளை தனதுரையில் வெளிப்படுத்தினார்.

அண்ணா கலந்து கொண்ட பினாங்குக் கூட்டத்தில் இன்னொரு சுவாரசிய சம்பவமும் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக, கோலாலம்பூர் கூட்டத்தில் அண்ணா ஆங்கிலத்தில் பேசினார் என்பதை அறிந்த பினாங்கு வாழ் தமிழர்களும் அண்ணாவின் ஆங்கிலப் பேச்சைக் கேட்க ஆர்வம் தெரிவித்தனராம்.

இதைப் பொருட்படுத்தாத அண்ணா தமிழிலேயே பேசிக் கொண்டிருக்க, ஆங்கிலத்தில் பேசும்படி இடையிடையே குறுக்கீடுகள் தொடர்ந்த நிலையில், “கோலாலம்பூர் உங்கள் நாட்டின் தலைநகரம்; அங்கு நடைபெற்றக் கூட்டத்தில் தமிழை அறியாதவர்களும் கலந்து கொண்டதால் ஆங்கிலத்தின் பேச வேண்டிய தேவை எழுந்தது. இங்கு அந்த நிலை இல்லை; பேசும் நானும் சரி, கேட்கும் நீங்களும் சரி அனைவருமே தமிழர் என்பதால், இங்கு ஏன் ஆங்கிலம்?” என்று நயமாகக் கேட்டு தமிழிலேயே தன் உரையைத் தொடர்ந்தாராம் அண்ணா!

பேரறிஞர் அண்ணா மறைந்தபோது, 1969 பிப்ரவரி 4-ஆம் நாள் வெளிவந்த தமிழ் நாளேட்டின் அத்தனைப் பக்கங்களும் அண்ணாவைப் பற்றிய செய்திகளையே தாங்கி வந்ததால், இது குறித்த தகவல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் வரை சென்றதாகவும் அப்போதைய அமைச்சர் துன் சம்பந்தனிடம் அவர் விளக்கம் கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட இயக்க மறுமலர்ச்சி தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ் மொழியின் தாக்கமும் எழுச்சி பெறத் தொடங்கியது.

அதற்கேற்ப ஏராளமான பருவ இதழ்கள் தமிழ் நாட்டில் வெளிவரத் தொடங்கின. அதன் தாக்கம் மலேசியாவிலும் எதிரொலித்தது.

இப்படிப்பட்ட நிலையில் அண்ணா வருகையின்போது தமிழ் எழுச்சி இன்னும் ஏகமாக எழுந்தது. நல்ல தமிழில் பேச வேண்டும் என்ற உணர்வு அன்றைய தலைவர்களிடமும் பொதுவாக அனைவரிடமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட தாக்கத்திற்கு ஆளான டான்ஸ்ரீ க. குமரன், உண்மையிலேயே “குமரனாக” – இளம் வயதினராக இருந்தபோது – வீட்டில் ‘சோறு’ என்று சொல்லி சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

இதைக் கண்டு சினம் கொண்ட அவரின் பாட்டி, இத்தனைக் காலமும் சாதம் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது என்ன புதிதாக சோறு என்கிறாய் என்று கடிந்து கொண்டாராம். அண்ணா அவர்கள், மலேசியத் தமிழர்களிடம் எத்தகைய தாக்கத்தையெல்லாம் ஏற்படுத்தினார் என நிறைய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார் அந்த மூத்த அரசியல்-சமூகத் தலைவர்.

பத்திரிகையாளர், இதழாளர், ‘ஹோம் லேண்ட்’ என்னும் ஆங்கில இதழாசிரியர், பள்ளி ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட கதை ஆசிரியர், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர் என்றெல்லாம் எத்தனையோ வடிவங்களை அண்ணா தன் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றிருந்தாலும் அவரின் உரையும் அடுக்குமொழி நடையும்தான் உலகளாவியத் தமிழர்களை அவரின்பால் ஈர்த்தன.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ ‘டாக்டர்’ பட்டத்தைப் பெற்ற அமெரிக்கர் அல்லாத ஒரே தலைவர் அறிஞர் அண்ணா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அண்ணாவைப் பற்றி சொல்ல முனைந்தால் எண்ணமெல்லாம் விண்ணக அளவிற்கு விரியும்.

மறைந்து 52 ஆண்டுகள் ஆன நிலையிலும் அண்ணாவைப் பற்றிய சிந்தனை உலகத் தமிழர்தம் நெஞ்சங்களில் பதிந்து இருக்கிறதென்றால், அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி!

பிரதமர் ஆன நிலையிலும் புத்தகப் புழுவாகவே வாழ்வைத் தொடர்ந்த நேரு, ஒரு கட்டத்தில் அண்ணாவை வெறுத்தார்; எதிர்த்தார் என்பதெல்லாம் உண்மைதான் எனினும் பின்னாளில் அதே நேரு அண்ணாவை வெகுவாகப் பாராட்டியதுடன் வியந்தும் புகழ்ந்தார்.

அண்ணா, தன்னைவிட பெரும் புத்தகப்புழுவாக இருக்கிறாரே என்று பளிச்சென சொன்னாராம் நேரு.

அப்படிப்பட்ட புத்தகப் புழுவான அண்ணா, ஒரு நாளில்கூட விடியலைக் கண்டதில்லை. பொடி உறிஞ்சிய மூக்கோடு நள்ளிரவைத் தாண்டியும் சில நாட்களில் வெள்ளி முளைக்கும் வேளையிலும் உறங்கச் சென்ற அண்ணா, தமிழினத்தின் விடியலுக்காக அயராது பாடாற்றினார் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.

-நக்கீரன்


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal