Home நாடு சரவணன் அறிவிப்பு : “வேலையில்லாதோர் விகிதம் குறைந்துள்ளது”

சரவணன் அறிவிப்பு : “வேலையில்லாதோர் விகிதம் குறைந்துள்ளது”

525
0
SHARE
Ad

2021-இன் இரண்டாம் காலாண்டில் வேலையில்லாதோர் விகிதம் குறைந்துள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மக்களவையில் அறிவித்தார்

கோலாலம்பூர் : நேற்று மசெவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) மக்களவைக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் ஆகஸ்டு வரையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையைப் பகிர்ந்து கொண்டார். புள்ளிவிவரங்களின்படி, வேலையின்மை விகிதம் 2021-இன் இரண்டாம் காலாண்டில் 5.1% இல் இருந்து 0.3% குறைந்து 4.8% ஆக உள்ளது.

கடந்த ஜுன் 2020-இல் தொடங்கப்பட்ட மனிதவள அமைச்சின் MYFutureJobs வேலைத் தளத்தின் வழி, ஜனவரி 2021 முதல் 1,574,327 வேலை காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021 புள்ளிவிவரப்படி இந்த வேலைவாய்ப்புத் தளத்தில் 1,136,000க்கும் மேற்பட்டவர்கள் பதிந்துள்ளார்கள். மனிதவள அமைச்சின், சமூக பாதுகாப்பு அமைப்பு பெர்கேசோ வழி வெற்றிகரமாக 215, 473 பேர், சம்பள ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் MYFutureJobs மூலம் வேலையைப் பெற்றுள்ளார்கள்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 57,307 வேலை வாய்ப்புகள் உள்ளன. கோலாலம்பூரில் 31,056 காலி இடங்கள் மற்றும் சரவாக்கில் 26,477 காலி இடங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையில் உற்பத்தித் துறை, 352,574 என மிக அதிக வேலை வாய்ப்புகளைப் பதிவு செய்கிறது. அதைத் தொடர்ந்து உணவு மற்றும் குளிர்பான சேவை நடவடிக்கைகளை உள்ளடக்கிய விடுதித் துறை, 232,450 வேலைகளையும், சில்லறை மற்றும் மொத்த விற்பனைத் துறைகள் 153,553 வேலை வாய்ப்புகளையும் MYFutureJobs தளத்தில் பதிவு செய்துள்ளன.

அனுபவம், கல்வி மற்றும் திறன் அடிப்படையில் வேலையில்லாதவர்கள் அல்லது வேலை இழந்தவர்கள் புதிய வேலை வாய்ப்புகளோடு இணைக்கப்படுகிறார்கள். இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தொழிலாளர் சந்தையில் அதிக தேவை இருப்பதாக அடையாளம் காணப்பட்ட முக்கியமானத் தொழிலாகத் தகவல் தொழில்நுட்பம் அமைகிறது. கணக்கியல், புள்ளி விவரங்கள் போன்ற கணினி சார்ந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன.

தொடர்ந்து அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க, இந்த ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பல்வேறு முயற்சிகளை மனிதவள அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதைத்தவிர, வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பெர்கேசோவில் பதிந்து கொள்வதன் மூலம் பெர்கேசோ அதிகாரிகள் வேலையிழந்த தனி நபருக்குப் பயிற்சித் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருப்பர்.

மேலும் வேலை காப்புறுதித் திட்டத்தில் பங்குகொள்வதன் வழி வேலையிழந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கவும் மனிதவள அமைச்சின் பெர்கேசோ வழி செய்கிறது.

ஆகவே வேலை தேடுபவர்களும் சரி, வேலை இழந்தவர்களும் சரி MYFutureJobs இணையத் தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த இணையத் தளம் மூலம், பல்வேறு நேர்காணல் நடவடிக்கைகள் மலேசியா முழுவதும் நடத்தப்படுகின்றன.

மலேசியக் குடும்பம் எனும் தாரக மந்திரத்தைக் கொண்டிருக்கும் புதிய அரசாங்கம் தொடர்ந்து வேலையின்மையைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் வருமான இடைவெளியைக் குறைக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மனிதவள அமைச்சின் வேலைவாய்ப்புச் சேவைகள் தொடர்பான தகவல்களுக்கு,
www.myfuturejobs.gov.my அல்லது 1-300-22-800 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal