கோலாலம்பூர் :முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் உள்நாட்டு வருமானவரி இலாகா தொடுத்திருக்கும் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்.
அவர் மீது விதிக்கப்பட்டிருக்கும் 1.69 பில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியை அவர் செலுத்த வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் வியாழக்கிழமை (செப்டம்பர் 9) மறு உறுதிப்படுத்தியது. அவரின் மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்தது.

இதே போன்று நஜிப் மகன் முகமட் நசிபுடின் 37.6 மில்லியன் வருமான வரி பாக்கி செலுத்த வேண்டுமென வழக்கொன்றையும் வருமான வரி இலாகா தொடுத்திருந்தது. அந்த வழக்கிற்கு எதிராக முகமட் நசிபுடின் செய்திருந்த மேல்முறையீட்டையும், மேல்முறையீட்டு நீதிமன்றம் (கோர்ட் ஆப் அப்பீல்) தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்புகளைத் தொடர்ந்து நஜிப்பும் அவரின் மகனும் கூட்டரசு நீதிமன்றத்திற்கு இறுதிக்கட்டமாக மேல்முறையீடு செய்யப் போவதாக அவர்களின் வழக்கறிஞர்கள் அறிவித்திருக்கின்றனர்.
நஜிப்பின் இன்னொரு மகன் வருமான வரி இலாகாவுடன் உடன்பாடு

நஜிப்பின் மற்றொரு மகன் முகமட் நிசார் தனது வருமான வரி பாக்கியை செலுத்துவதில் வருமான வரி இலாகாவுடன் உடன்பாடு கண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மற்றொரு மகன் டத்தோ முகமட் நிசார். நஜிப்பின் முதல் மனைவியின் மூத்த புதல்வர். வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார். நஜிப் தலைவராக இருக்கும் பெக்கான் அம்னோ தொகுதியில் இளைஞர் பகுதித் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
43 வயதான முகமட் நிசார் உள்ளூர் வருமான வரி இலாகாவுக்கு 13.16 மில்லியன் வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும் என அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நஜிப்பின் மகன் முகமட் நிசாருக்கும் வருமான வரி சிறப்பு ஆணையர்கள் மன்றத்திற்கும் இடையில் 13.1 மில்லியன் ரிங்கிட் பாக்கியைச் செலுத்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு வருமான வரி பாக்கி உள்ளவர்களுக்காக தீர்வு காண உருவாக்கப்பட்ட நிதியமைச்சின் சிறப்புப் பிரிவு, வருமான வரிக்கான சிறப்பு ஆணையர்கள் மன்றம்.
இந்த ஆணையர்களின் மன்றம் விசாரித்து வருமான வரி பாக்கி, கணக்கிடப்பட்டது நியாயமா, சரியா என்பதை நிர்ணயிக்கும். பாக்கியை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்தும் முடிவெடுக்கும்.
2011-ஆம் ஆண்டு முதல் முகமட் நிசார் செலுத்தாத வருமானவரி தற்போது 13.16 மில்லியன் பாக்கியாக உயர்ந்திருக்கிறது.
இந்தப் பாக்கியை அவர் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து முகமட் நிசார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
இதற்கிடையில்தான் வருமானவரி ஆணையர்களின் மன்றத்தோடு உடன்பாடு கண்டு இந்த வழக்கிற்கு தீர்வு கண்டிருக்கிறார் முகமட் நிசார்.
இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து முகமட் நிசாரின் மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்படும் எனவும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்மையில் கருத்துரைத்திருந்த நஜிப், தனது மகன் முகமட் நிசார் செலுத்துவதற்காக வருமான வரி இலாகாவுடன் உடன்பாடு கண்ட தொகை, 13.16 மில்லியன் ரிங்கிட்டை விட “மிக, மிக” குறைவாகும் எனத் தெரிவித்திருக்கிறார்.
வருமான வரி இலாகா அந்தத் தொகையை பகிரங்கமாக அறிவிக்கலாம் – தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் நஜித் தெரிவித்திருந்தார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal