Home நாடு நஜிப்பின் மகன் பெக்கான் தொகுதியில் போட்டியிட தயாராகிறார்

நஜிப்பின் மகன் பெக்கான் தொகுதியில் போட்டியிட தயாராகிறார்

480
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தனது வருமான வரி வழக்கிற்குத் தீர்வு கண்டிருப்பதன் மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நஜிப் துன் ரசாக்கின் மகனான முகமட் நிசார் தயாராகி வருகிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினராக நீண்ட காலமாகத் தற்காத்து வரும் தொகுதி பகாங் மாநிலத்தில் உள்ள பெக்கான். அவருக்கு முன்பாக அவரின் தந்தையாரும் முன்னாள் பிரதமருமான துன் அப்துப் ரசாக் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்தார்.

துன் ரசாக் 1976-ஆம் ஆண்டில் மறைந்ததைத் தொடர்ந்து அப்போது முதல் அந்தத் தொகுதியைத் தற்காத்து வருகிறார் நஜிப்.

#TamilSchoolmychoice

தற்போது 1எம்டிபி தொடர்பான ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நஜிப் மேல்முறையீட்டுத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். அப்படியே அவர் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டாலும், பெக்கான் தொகுதியில் மீண்டும் இடைத் தேர்தல் நடத்தப்படாது.

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொதுத் தேர்தல் நடந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டால், அதன் பின்னர் ஒரு நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தொகுதி, ஏதாவது காரணங்களுக்காக காலியானால் மீண்டும் அங்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டியதில்லை.

நஜிப்பின் மகன் முகமட் நிசார் தற்போது பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பகுதித் தலைவராக இருக்கிறார்.

நஜிப்பின் வழக்குகளில் அவருக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்பட்டு அவர் பெக்கான் தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சட்டரீதியாகப் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படலாம்.

அதற்கு முன்னெச்சரிக்கையாகவே முகமட் நிசார் தனது வருமானவரி பாக்கி வழக்கிற்கு தீர்வு கண்டு அதன் மூலம் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார் எனக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் முகமட் நிசார் வருமான வரி பாக்கிக்கான வழக்கில் உடன்பாடு கண்டிருப்பது குறித்தும் நஜிப் கருத்துரைத்திருக்கிறார்.

உண்மையில் தனது மகன் செலுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை 13 மில்லியனை விட மிக மிகக் குறைவானது எனக் கூறியிருக்கிறார் நஜிப்.

வேண்டுமானால், வருமான வரி இலாகா அந்த உண்மையானத் தொகையைப் பகிரங்கமாக அறிவிக்கலாம் என்றும் அதுகுறித்துத் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் நஜிப் கூறியிருக்கிறார்.

வருமானவரி இலாகா தங்களின் வழக்கில் கோரிய தொகைதான் 13.16 மில்லியன். மாறாக தாங்கள் உடன்பாடு மூலம் தீர்வு கண்டு செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கும் தொகை அதை விட மிகவும் குறைவாகும் என்றும் நஜிப் கூறியிருக்கிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal