Home நாடு நஜிப் மகனின் வருமான வரி பாக்கி 13 மில்லியனைவிட “மிக மிகக்” குறைவாகும்!

நஜிப் மகனின் வருமான வரி பாக்கி 13 மில்லியனைவிட “மிக மிகக்” குறைவாகும்!

594
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகன் டத்தோ முகமட் நிசார் உள்ளூர் வருமான வரி இலாகாவுக்கு 13.16 மில்லியன் வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும் என அவர் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் உடன்பாடு காணப்பட்டதாக நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 3) தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதுகுறித்து இன்று கருத்துரைத்த நஜிப், உண்மையில் செலுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை 13 மில்லியனை விட மிக மிகக் குறைவான ஒன்று எனக் கூறியிருக்கிறார்.

வேண்டுமானால், வருமான வரி இலாகா அந்த உண்மையானத் தொகையைப் பகிரங்கமாக அறிவிக்கலாம் என்றும் அதுகுறித்துத் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் நஜிப் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

வருமானவரி இலாகா கோரிய தொகைதான் 13.16 மில்லியன். மாறாக தாங்கள் தீர்வு கண்டு செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கும் தொகை அதை விட மிகவும் குறைவாகும் என்றும் நஜிப் கூறியிருக்கிறார்.

முகமட் நிசாரின் வருமான வரி பாக்கி

நஜிப்பின் முதல் மனைவியின் மூத்த புதல்வர் முகமட் நிசார். வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார். நஜிப் தலைவராக இருக்கும் பெக்கான் அம்னோ தொகுதியில் இளைஞர் பகுதித் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

43 வயதான முகமட் நிசார் உள்ளூர் வருமான வரி இலாகாவுக்கு 13.16 மில்லியன் வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும் என அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நஜிப்பின் மகன் முகமட் நிசாருக்கும் வருமான வரி சிறப்பு ஆணையர்கள் மன்றத்திற்கும் இடையில் 13.1 மில்லியன் ரிங்கிட் பாக்கியைச் செலுத்த உடன்பாடு காணப்பட்டுள்ளது என நிசாரின் வழக்கறிஞர் அறிவித்திருந்தார்.

வருமான வரி பாக்கி உள்ளவர்களுக்காக தீர்வு காண உருவாக்கப்பட்ட நிதியமைச்சின் சிறப்புப் பிரிவு, வருமான வரிக்கான சிறப்பு ஆணையர்கள் மன்றம்.

இந்த ஆணையர்களின் மன்றம் விசாரித்து வருமான வரி பாக்கி, கணக்கிடப்பட்டது நியாயமா, சரியா என்பதை நிர்ணயிக்கும். பாக்கியை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்தும் முடிவெடுக்கும்.

2011-ஆம் ஆண்டு முதல் முகமட் நிசார் செலுத்தாத வருமானவரி தற்போது 13.16 மில்லியன் பாக்கியாக உயர்ந்திருக்கிறது.

இந்தப் பாக்கியை அவர் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து முகமட் நிசார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

இதற்கிடையில்தான் வருமானவரி ஆணையர்களின் மன்றத்தோடு உடன்பாடு கண்டு இந்த வழக்கிற்கு தீர்வு கண்டிருக்கிறார் முகமட் நிசார்.

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து முகமட் நிசாரின் மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்படும் எனவும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal