இந்தியர் நலனுக்கும் பொறுப்பு வகிக்கும் ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹலிமா, இந்திய சமுதாயத்தை தோல்வியுறச் செய்தது மட்டுமல்லாமல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் புத்தி கூர்மையை நாடாளுமன்றத்தில் அவமதித்ததன் மூலம் இந்திய சமுதாயத்தின் துயரத்தையும் அவலநிலையையும் அவமதிப்பு செய்துள்ளார் என்றும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் (எம்ஏபி) தலைவருமான பொன்.வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அக்டோபர் 6-ஆம் தேதி, 12-வது மலேசியத் திட்ட நிறைவுரையில் ஹாலிமா, இந்திய சமுதாய சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரையப்பட்டுள்ள திட்டம் குறித்து சரியாக கோடிட்டுக் காட்டாமல் தன் கடமையில் இருந்து தவறியுள்ளார். இந்திய சமுதாயத்திற்காக தான் வரைந்துள்ள தெளிவான மற்றும் துல்லியமான திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கத் தவறியதுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய சமுதாயத்திற்காக அரசாங்கத்திடம் எவ்வளவு நிதியைக் கேட்டுள்ளார் என்பதையும் ஹாலிமா தெரிவிக்கவில்லை” எனவும் வேதமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டினார்.
“மற்ற அமைச்சுகளுடன் ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அப்படியானால், மித்ரா மூலம் ஏனைய அமைச்சுகளுடன் நான் பதவி வகித்த காலத்தில் ஏற்படுத்திய நல் உறவைத் தொடராமல் ஹாலிமா ஏன் அலட்சியம் செய்தார்?” என்று கேள்வி எழுப்பியுள்ள பொன்.வேதமூர்த்தி, தன் தலைமையில் செயல்பட்ட மித்ரா விவசாயம், உள்நாட்டு வர்த்தகம், சமூக நலம், பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் ஒருசில முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்த நிலையில் ஹாலிமா இத்தனையையும் அலட்சியம் செய்துவிட்டதுடன் தேசிய மேம்பாட்டில் இந்திய சமுதாயமும் இணைவதற்கான அனைத்துக் கதவுகளையும் அடைத்துவிட்டார் என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதில் மிகுந்த வருத்தத்துக்கு உரியது என்னவென்றால், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமுதாயத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் படவேண்டும் என கேட்டபோது அதை கேலிப்பொருளாக்கி பின்னர் பொறுப்பை நிதி அமைச்சர் பக்கமாக வசதியாக திருப்பிவிட்டுள்ளார் ஹாலிமா. பிரதமர் இஸ்மாயில் சப்ரி சார்பில் ஹாலிமா முன்னெடுக்கும் புதிய மலேசியக் குடும்பம் என்பது இதுதானா? என்றும் வேதமூர்த்தி வினவியுள்ளார்.