
மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற முடிவை அடுத்த வாரம் எடுக்கப் போவதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்துள்ளார்.
தற்போது இடைக்கால மாமன்னர் பொறுப்பை வகிக்கும் பேராக் சுல்தான் நஸ்ரின் முயிசுடின் ஷா இதுகுறித்த விளக்கங்களை சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்), சுகாதார அமைச்சு, தேர்தல் ஆணையம் ஆகிய தரப்புகளிடமிருந்து பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் அமைச்சரவை மலாக்கா தேர்தல்கள் குறித்து முடிவு செய்யும் என்றும் பிரதமர் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) கோலாலம்பூர் அங்காசாபுரி வளாகத்தில் “மலேசியக் குடும்பம்” சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் இஸ்மாயில் சாப்ரி இதனைத் தெரிவித்தார்.
தற்போது மூன்று இடைத் தேர்தல்கள் அவசர கால அமுலாக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
சரவாக் மாநிலம், கிரிக் நாடாளுமன்றம், பத்து சாப்பி நாடாளுமன்றம், புகாயா சட்டமன்றம் ஆகிய வட்டாரங்களில் அவசர காலம் அமுலாக்கப்பட்டு அங்கு நடைபெற வேண்டிய இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
கலைக்கப்பட்ட மலாக்கா சட்டமன்றம்
மலாக்கா மாநில சட்டமன்றம் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் நடைபெற்று வந்து அரசியல் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
இப்போது வேறொரு கோணத்தில் அரசியல் சர்ச்சைகள் தொடங்கியிருக்கின்றன.
28 சட்டமன்றங்களைக் கொண்டது மலாக்கா சட்டமன்றம். இங்கு இடைத் தேர்தல் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றால், அந்த மாநிலத்தில் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். அத்தகைய அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டதைத் தொடர்ந்து சரவாக் மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
அப்படி அவசர காலம் அறிவிக்கப்படவில்லையென்றால் மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்ட அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மலாக்காவில் அவசர காலத்தை அறிவியுங்கள் – நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட சாஹிட் ஹாமிடி
இதற்கிடையில் மலாக்கா சட்டமன்றப் பிரச்சனை தொடங்கியபோது சட்டமன்றத்தைக் கலைத்து விடுங்கள் என சவால் விட்ட அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி. மலாக்காவை ஆள வேண்டியது யார் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்றார்.
ஆனால் அதன்பின்னர் அதிரடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சட்டமன்ற இடைத் தேர்தல் வைப்பது பொதுமக்களுக்கு ஆபத்தானது, எனவே உடனடியாக மலாக்காவில் அவசர காலத்தை பிரகடனம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
காபந்து அரசாங்கம் செல்லாது – நீதிமன்றம் செல்லும் பாக்காத்தான் ஹாரப்பான்
மலாக்கா மாநில சட்டமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த சட்டமன்ற இடைத் தேர்தல்வரை நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி தலைமையிலான மாநில அரசாங்கம் காபந்து அரசாங்கமாக செயல்படும் என சட்டமன்ற அவைத் தலைவர் ரவுப் யூசோ அறிவித்திருந்தார்.
ஆனால், மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்ட முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி தொடர்ந்து காபந்து அரசாங்கத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது செல்லாது என பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் வழக்குகளின் அடிப்படையில் மலாக்கா முதலமைச்சரின் நியமனம் செல்லாது என மலாக்கா பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் அட்லி சஹாரி தெரிவித்தார்.
2018-இல் பக்காத்தான் ஹாரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் அட்லி சஹாரிதான் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal