மலாக்கா : கடந்த சில நாட்களாக இழுபறியில் நீடித்து வந்த மலாக்கா மாநில சட்டமன்றப் போராட்டம், அந்த மாநில சட்டமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வந்தது.
மலாக்காவில் விரைவில் சட்டமன்றங்களுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத்தைக் கலைக்கும் மாநில ஆளுநர் முகமட் அலி ருஸ்தாமின் முடிவை மலாக்கா சட்டமன்ற அவைத் தலைவர் அப்துல் ரவுப் யூசோ இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவு நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலியின் முடிவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
28 சட்டமன்றங்களைக் கொண்ட மலாக்காவில் இடைத் தேர்தல் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றால், அந்த மாநிலத்தில் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். அத்தகைச அவசர கால சட்டம் அமுலாக்கத்தைத் தொடர்ந்து சரவாக் மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
அப்படி அவசர காலம் அறிவிக்கப்படவில்லையென்றால் மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்ட அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேசிய முன்னணி-பெரிக்காத்தான் நேஷனல் இணைந்த கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவை சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹாரோனும் அவரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டதை அடுத்து, கடந்த சில நாட்களாக ஆட்சிக் கவிழ்ப்பு எந்த நேரத்திலும் நடைபெறலாம் என்ற நிலைமை இருந்து வந்தது.
சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெற்றால் கொவிட்-19 தொடர்பான முழு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் அந்தத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 4) வரையில் மலாக்கா மாநிலத்தில் 18-வயதுக்கும் கூடுதலான பொதுமக்களில் 88.2 விழுக்காட்டினருக்கு முழுமையான இரண்டு அளவையிலான கொவிட் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.