Home நாடு புதிய தமிழ்ப் பள்ளிக்கு மாணிக்கவாசகம் பெயர்- உறுதிப்படுத்த சரவணனுக்கு, காந்தன் கோரிக்கை

புதிய தமிழ்ப் பள்ளிக்கு மாணிக்கவாசகம் பெயர்- உறுதிப்படுத்த சரவணனுக்கு, காந்தன் கோரிக்கை

491
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை மாலையில் இயங்கலை வழி நடைபெற்ற டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் டத்தோ வி.எல்.காந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

காந்தன் மாணிக்கவாசகத்தின் இளைய சகோதரர் ஆவார்.

டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டப் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் தலைமை தாங்கினார்.

#TamilSchoolmychoice

காந்தன் தனதுரையில், பெட்டாலிங் ஜெயா உத்தாமாவில் பிஜேஎஸ் 1 என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய தமிழ்ப் பள்ளிக்கு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

“மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்புத் திட்டத்திற்குத் தலைமையேற்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இந்த வேளையில் அவருக்கு அன்பான ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்த காந்தன், தொடர்ந்து பெட்டாலிங் உத்தாமா புதிய தமிழ்ப் பள்ளி தோற்றுவிக்கப்பட்ட விவரங்களையும் தனதுரையில் குறிப்பிட்டார்.

“சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், சுங்கைவே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காலகட்டத்தில் எனது தொகுதியில் தமிழ்ப் பள்ளி ஒன்றைக் கட்ட நான் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினேன். எனது தொகுதியில் இருந்த இடம் பெயர்ந்த இந்தியர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவும், தொகுதியில் இருக்கும் இந்திய சமூகத்திற்காகவும் அந்தத் தமிழ்ப் பள்ளியை நிர்மாணிக்க விரும்பினேன். ஏனோ அந்தத் தமிழ்ப் பள்ளி பல காரணங்களால் பல ஆண்டுகளாகக் கட்டப்பட முடியவில்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெட்டாலிங் மஇகா கிளையின் தலைவராக இருந்த காலம் சென்ற பி.பாலகிருஷ்ணன் தலைவராகவும், எம்.மணிவேலு செயலாளராகவும், பொன்னையா, எம்.மோகனதாஸ், அப்துல் ரஷிட் இஷாக் ஆகியோரும் ஒரு குழுவாகச் செயல்பட்டு அந்தப் பள்ளியைக் கட்ட முயற்சிகள் எடுத்தனர்” என அந்தப் புதிய தமிழ்ப் பள்ளி கட்டப்பட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து காந்தன் விவரித்தார்.

நஜிப் எடுத்த முயற்சியால் உருவான தமிழ்ப் பள்ளி

“பல ஆண்டுகளாகக் கட்டப்படாமல் இருந்த அந்தப் பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் ஆதரவோடு கட்டப்பட்டது. அந்தப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் டத்தோஶ்ரீ நஜிப் “SRJK (TAMIL) TAN SRI DATUK SRI V.MANICKAVASAGAM” என அந்தப் பள்ளிக்குப் பெயர் சூட்டினார். திரு வி.விவேகானந்தன், நான்கு மாடிகள் கொண்ட கம்பீரமான பள்ளிக்கூடக் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். இந்தப் பள்ளிக் கூடத்துக்குத் தேவையான தளவாடப் பொருட்களும் பெறப்பட்டு, பொருத்தப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டு முதல் பள்ளி செயல்பட மாணவர் சேர்க்கும் பணிகளும் தொடங்கிவிட்டன” எனவும் காந்தன் மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் இறுதியில் பள்ளியின் அதிகாரபூர்வத் தொடக்க விழா நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

“இந்தப் பள்ளிக்கு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் பெயரை  டத்தோஶ்ரீ நஜிப் சூட்டியிருந்தாலும், சில சிக்கல்களால் கல்வி அமைச்சு இன்னும் இந்தப் பெயரை அதிகாரபூர்வமாக, தங்களின் ஆவணங்களில் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது” எனவும் காந்தன் குறிப்பிட்டடார்.

“டான்ஶ்ரீ மாணிக்கா குடும்பத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். பெட்டாலிங்கில் கட்டப்படும் தமிழ்ப் பள்ளிக்கு “SRJK (TAMIL) TAN SRI DATUK SRI V.MANICKAVASAGAM” என்ற பெயரை கல்வி அமைச்சு அதிகாரபூர்வமாக சூட்டுவதை உறுதிப்படுத்த, தாங்கள் ஆவன செய்ய வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் அது” என சரவணனிடம் காந்தன் கேட்டுக் கொண்டார்.