மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இழுபறியில் நீடித்து வந்தது மலாக்கா மாநில சட்டமன்றப் போராட்டம். அந்த மாநில சட்டமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த அரசியல் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது வேறொரு கோணத்தில் அரசியல் சர்ச்சைகள் தொடங்கியிருக்கின்றன.
28 சட்டமன்றங்களைக் கொண்டது மலாக்கா சட்டமன்றம். இங்கு இடைத் தேர்தல் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றால், அந்த மாநிலத்தில் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். அத்தகைய அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டதைத் தொடர்ந்து சரவாக் மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
அப்படி அவசர காலம் அறிவிக்கப்படவில்லையென்றால் மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்ட அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மலாக்காவில் அவசர காலத்தை அறிவியுங்கள் – நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட சாஹிட் ஹாமிடி
இதற்கிடையில் மலாக்கா சட்டமன்றப் பிரச்சனை தொடங்கியபோது சட்டமன்றத்தைக் கலைத்து விடுங்கள் என சவால் விட்டார் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி. மலாக்காவை ஆள வேண்டியது யார் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்றார் அவர்.
ஆனால் இப்போது அதிரடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார் அவர்.
சட்டமன்ற இடைத் தேர்தல் வைப்பது பொதுமக்களுக்கு ஆபத்தானது. எனவே உடனடியாக மலாக்காவில் அவசர காலத்தை பிரகடனம் செய்ய வேண்டும்
இதற்கிடையில் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெற்றால் கொவிட்-19 தொடர்பான முழு நிபந்தனைக் கட்டுப்பாடுகளுடன் அந்தத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.
காபந்து அரசாங்கம் செல்லாது – நீதிமன்றம் செல்லும் பாக்காத்தான் ஹாரப்பான்
மலாக்கா மாநில சட்டமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த சட்டமன்ற இடைத் தேர்தல்வரை நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி தலைமையிலான மாநில அரசாங்கம் காபந்து அரசாங்கமாக செயல்படும் என இன்று சட்டமன்ற அவைத் தலைவர் ரவுப் யூசோ அறிவித்திருந்தார்.
ஆனால், மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்ட முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி தொடர்ந்து காபந்து அரசாங்கத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது செல்லாது என பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் வழக்குகளின் அடிப்படையில் மலாக்கா முதலமைச்சரின் நியமனம் செல்லாது என மலாக்கா பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் அட்லி சஹாரி தெரிவித்தார்.
2018-இல் பக்காத்தான் ஹாரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் அட்லி சஹாரிதான் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.