Home Photo News அன்வார் : இலவு காத்த கிளியின் கதையா? பொதுத் தேர்தலிலாவது வெற்றிக்கனி பறிப்பாரா?

அன்வார் : இலவு காத்த கிளியின் கதையா? பொதுத் தேர்தலிலாவது வெற்றிக்கனி பறிப்பாரா?

789
0
SHARE
Ad

(இஸ்மாயில் சாப்ரி எதிர்பார்க்கப்பட்டது போல், பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த பிரதமராகும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை இழந்திருக்கிறார் அன்வார் இப்ராகிம். இலவு காத்த கிளியாகவேத் தொடர்கிறது அன்வார் இப்ராகிமின் அரசியல் வாழ்க்கை. அது குறித்துத் தனது அரசியல் கண்ணோட்டத்தை வழங்குகிறார் எழுத்தாளர் நக்கீரன்)

கோலாலம்பூர்: மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்) தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை நம்பித்தான் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தையும் வழங்கினர். பிரதமராக துன் மகாதீரும், அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிமும் பக்காதான் ஹரப்பான் கூட்டணியால், வாக்காளர்களிடையே முன்னிறுத்தப்பட்டனர்.

அப்படிப்பட்ட 14-ஆவது நாடாளுமன்றம் இப்பொழுது மூன்றாவது பிரதமரைக் காண இருக்கும் நிலையில், இந்த முறையும் அன்வார் இலவு காத்த கிளியாகவே தனது அரசியல் பயணத்தைத் தொடர்கிறார்.

#TamilSchoolmychoice

அம்னோ தேசிய உதவித் தலைவரும் பகாங் மாநிலத்து பெரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலைந்து போன கொல்லைப்புற ஆட்சியின் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீண்டும் ஒரு கொல்லைப்புற ஆட்சிக்கு பிரதமராகத் தலைமையேற்க இருப்பது அநேகமாக உறுதி என்றே தெரிகிறது.

மலாய் முஸ்லிம் ஆட்சியுரிமை என்னும் கட்டமைப்பை முன்னிலைப்படுத்தி அரசியல் தவளைகள், கட்சிமாறிக் கூட்டம், அரசியல் நம்பிக்கைத் துரோகியர், வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் அரசியல் வஞ்சகர் வட்டம், 14-ஆவது பொதுத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகிய தரப்பினர் எல்லாம் ஒன்றுகூடி ‘கூட்டாஞ்சோறு’ சமைப்பதைப் போல உருவாக்கிய தேசியக் கூட்டணியின் மறுவடிவத்திற்குத்தான் சப்ரி யாக்கோப் தலைமை ஏற்க இருக்கிறார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக பிரதமர் வேட்பாளராக ஒருவர் மலேசியாவில் மட்டுமல்ல; உலக அளவிலும் காத்திருக்கிறார் என்றால், அவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமாகத்தான் இருப்பார்.

துடிப்பான துணைப் பிரதமராகவும் உலகம் போற்றிய நிதி அமைச்சராகவும் விளங்கிய அன்வார், அரசியல் சூழ்ச்சிக்கும் வஞ்சகத்திற்கும் ஆளாகி, 10 ஆண்டுகளை சிறைச்சாலையில் கழித்தவர்.

2018 பொதுத் தேர்தல் நேரத்தில் அன்வார் சிறைவாசம் மேற்கொண்டிருந்ததால், இடைக்காலப் பிரதமராக வந்த துன் மகாதீர் மக்களிடமும் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களிடமும் உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாமல் அன்வார் பிரதமராக வரமுடியாமல் செய்யவேண்டிய அத்தனை சூழ்ச்சியையும் செய்தார்.

தனக்கான நெருக்கடி முற்றி விலக வேண்டிய நேரத்தில், தான் சார்ந்த பெர்சத்து கட்சியை நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு தானும் வெளியேறினார். அதன்வழி ஒரே கல்லில் இரண்டு காய்களை அடித்தார் மகாதீர்.

அன்வாருக்கான பெரும்பான்மையைக் குறைத்ததுடன், அவரின் கட்சியையும் உடைத்தார். தவிர, 14-ஆவது பொதுத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் ‘ஷெரட்டன் நகர்வு’ என்ற பெயரில் இரகசியக் கூட்டங்களை நடத்தி புதிய ஆட்சியை அமைக்கவும் வழி அமைத்துக் கொடுத்துவிட்டு தந்திரமாக ஒதுங்கிக் கொண்டார் மகாதீர்.

இப்படி கொல்லைப்புறமாக அரியணை அமர்ந்த டான்ஸ்ரீ மகியாடின் யாசின், 8-ஆவது பிரதமர் என்ற அளவில் நாட்டை வழிநடத்துவதில் முனைப்பு காட்டுவதைவிட, தன்னுடைய கட்சியை குறுக்கு வழியில் வலுப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். அந்த வகையில், சபா மாநிலத்தில் அமைதியாக நடந்து கொண்டிருந்த வாரிசான் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, வாரிசான் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்து கட்சிக்குத் தாவும் படலம் ஆரம்பமானது.

இத்தனைக்கு அப்போது சபா மாநில முதல்வராக இருந்தவர் மகியாடினின் பழைய கூட்டாளி டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால்தான். இந்த நிலையில் கொதித்தெழுந்த அப்டால், சட்டமன்றத்தை கலைத்தார்.

இதனால் அங்கு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய சூழல் எழுந்தது. தீபகற்ப மலேசியாவில் கொவிட்-19 ஆட்கொல்லி கிருமி இன்று இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுப்பதற்கு சபா மாநிலத் தேர்தல்தான் அடைப்படைக் காரணங்களில் ஒன்று.

முதன் முதலில் இந்தக் கிருமி 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மலேசியாவில் கால்பதிக்க ஆரம்பித்த நேரத்தில் அதற்கான தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விட்டவர் மகாதீர். அவர், அன்வாருக்கான இரும்புத் திரையை எப்படி வலுப்படுத்துவது என்பதில்தான் குறியாக இருந்தார்.

மகாதீர் விலகினாலும் பெர்சத்து கட்சிதான் மீண்டும் நாட்டை வழிநடத்தியது. தலைமைதான் வேறு; தற்பொழுது, தனக்கு தோள்கொடுத்த நண்பர்களாலேயே காலை வாரி விடப்பட்ட மகியாடின் மீண்டும் அம்னோவிடம் சரணடைந்திருக்கிறார்.

பெர்சத்துக் கட்சிக்கான கட்டமைப்பு இல்லாத நிலையில், அன்வாரின் ஆதரவால்தான் டான்ஸ்ரீ மஹியாடின் யாசின், மகாதீர் உட்பட அந்தக் கட்சியினர் 12 பேர் கடந்த தேர்தலில் வென்றனர். ஆனால், அந்த இருவரும் அன்வாருக்கான வாய்ப்பை வகையாக தட்டிப் பறித்தனர்.

அதற்கு அவர்கள் கையில் எடுத்த துருப்புச் சீட்டுதான் ‘மலாய் முஸ்லிம் ஆட்சி அதிகாரம்’.

அம்னோவைப் பொறுத்தவரை, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராக வந்துவிடக்கூடாது என்பதுதான் பொதுவான நிலை. அன்வார் பிரதமராக உருவானால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அம்னோவில் இருந்து வேறு எவரும் பிரதமர் கனவைக் காண முடியாது.

இருந்தாலும் அம்னோவின் இன்றைய தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடிக்கும் அன்றைய தலைவர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கும் அன்வார்மீது ஏதோவொரு வகையில் ஈடுபாடு இருந்தாலும் அதை பளிச்சென அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை.

இம்மூவரும் ஒரு கட்டத்தில் ஒன்றாக இருந்தவர்கள். ஹமிடியைப் பொறுத்தவரை அவரை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவராக உருவாக்கியவர் அன்வார். ஹமிடிக்கு எதிராக மகாதீர் நிறுத்திய வேட்பாளரையே அன்வார் தோற்கடித்தார் என்பதெல்லாம் கடந்த நூற்றாண்டின் நிறைவுகட்டத்தில் அம்னோ சந்தித்த சம்பவங்கள்.

சாஹிட் ஹாமிடி – மொகிதின் யாசின்

பாஸ் கட்சிக்கும் அன்வார் என்றால் ஆகாது. காரணம், அன்வார் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் கூடவே ஜசெக-வும் ஒட்டிக் கொள்ளும். இது, மலாய் முஸ்லிம் ஆட்சி அதிகாரம் என்னும் கட்டமைப்பிற்கு குந்தகமாக அமைந்துவிடும். தவிர, அன்வார் பிரதமர் ஆனால் தங்கள் கட்சியின் எதிர்காலமும் கேள்விக்குறிக்கு ஆளாகிவிடும் என்ற அச்சம் பாஸ் கட்சிக்கு உள்ளூர இருக்கிறது. இத்தகைய காரணங்களால், அன்வாருக்கு எதிராகவே பாஸ் கட்சி காய் நகர்த்தி வருகிறது.

எது எவ்வாறாக இருந்தாலும் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் வென்றுவிட்டு, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் அணி சேர்ந்து, மாற்று ஆட்சி அமைக்கும் நடவடிக்கைக்கு துணைபோகும் பெர்சத்து கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கிற்கும் என்ன ஆனாலும் பதவி ஒன்றுதான் என்ற இலக்கில் செயல்படும் அம்னோவிற்கும் அடுத்தப் பொதுத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என நம்பலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இலவு காத்த கிளியைப் போல ஏமாற்ற நிலைக்கு ஆளாகி இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார், இனி அடுத்தப் பொதுத் தேர்தலை நோக்கி தன் அரசியல் பயணத்தை தொடர்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

இன்றைய அரசியல் போக்கில், மக்கள் பிரதிநிதிகளால் அன்வார் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் வரும் பொதுத்தேர்தலில் மலேசிய வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவை அவர் பெறக்கூடும்.

-நக்கீரன்

(மேற்கண்ட கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துகள் யாவும் முழுக்க முழுக்க கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியல்  இணைய ஊடகத்தின் கருத்துகளை பிரதிபலிப்பதாகாது)