Home கலை உலகம் மின்னல் வானொலியின் சமூக நலத் திட்டம் ‘நமக்கு நாமே’

மின்னல் வானொலியின் சமூக நலத் திட்டம் ‘நமக்கு நாமே’

800
0
SHARE
Ad

(மின்னல் வானொலியின் சமூக நலத் திட்டமாக ஒலியேறி வருகிறது ‘நமக்கு நாமே’ நிகழ்ச்சி. அதுகுறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நக்கீரன்)

மின்னல் பண்பலை வானொலி, தற்போதைய கொரோனா பேரிடரை கருத்திற் கொண்டு ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் சமூக நலத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

சமூக நலம் சார்ந்த இம்முன்னெடுப்பு, மின்னலின் ‘காலைக் கதிர்’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக மாலை நேரத்து மதியைப் போல உருவெடுத்துள்ளது; மனதிற்கு இதந்தரும் அந்திமந்தாரத்து செவ்வானத்தைப் போல அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

இளமை, இனிமை, புதுமை என்னும் மூன்று ‘மை’களை தாரக மந்திரமாகக் கொண்ட இவ்வானொலி, தற்பொழுது கடமை என்னும் இன்னொரு ‘மை’யை இணைத்துக் கொண்டுள்ளது.

கல்வி நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவுதல், வாழ்க்கையில் விளிம்பு நிலையில் இருப்போரை அரவணைப்பது, உறவினரைப் பிரிந்து நீண்ட காலமாக பரிதவிப்போரை இணைப்பது, மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு உதவிக் கரம் நீட்டுதல் என்றெல்லாம் வாரத்தின் ஏழு நாட்களிலும் ஏழு தலைப்புகளில் உதவுவதை இலக்காகக் கொண்டது இந்த ‘நமக்கு நாமே’ திட்டம்.

மின்னல் பண்பலை வானொலியில் மாலை வேளையில் ‘உல்லாசம், உற்சாகம்’ என்பதை உள்ளீடாகக் கொண்டு பெரும்பாலும் வீட்டில் இருப்போரையும் பணி முடிந்து வீட்டிற்கு திரும்ப பயணம் மேற்கொண்டிருப்போரையும் இலக்காகக் கொண்டு படைக்கப்படும் நிகழ்ச்சி ஆனந்த தேன்காற்று.

அந்த ஆனந்த தேன்காற்று நிகழ்ச்சியின் மூலம் திங்கள் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரையில், ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணி அளவில் இந்த ‘நமக்கு நாமே’ நிகழ்ச்சி ஒலியேறுகிறது. பிறர் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம் என்று சொல்லும் மின்னல் வானொலி, தன் நேயர்களையும் உதவிக்கரம் நீட்டும் பாங்குடைய கொடைமனத்தினரையும் இதில் இணைந்து கொள்ள அழைக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி

மின்னல் பண்பலையின் புதிய நிர்வாகி கு.கிருஷ்ணமூர்த்தியின் தலைமைத்துவத்தில், சமுதாயக் கடப்பாடு கொண்ட பண்பலை வானொலியாக, இந்த நிகழ்ச்சியின் மூலம் மின்னல் உருமாறத் தொட இருக்கின்றது.

உண்மையில் ஆனந்த தேன்காற்றை காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அடுத்தத் தளத்தில் தவழ விட்டிருக்கிறோம் என பெருமை கொள்கிறார் அறிவிப்பாளர் சுகன்யா சதாசிவம்.

சுகன்யா

திங்கட்கிழமைகளில் இடம்பெறும் நமக்கு நாமே அங்கத்தை, ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சி; தகரம் இப்போ தங்கம் ஆச்சி’ எனும் தலைப்பில் இவர் படைக்கிறார்.

நாம் தகரம் எனக் கருதி ஒதுக்குவதை இன்னொருவர் தங்கமெனக் கொண்டாடலாம். அந்த வகையில், நாம் பயன்படுத்தாத, ஆனால் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைத் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் உன்னத நிகழ்ச்சி இது.

ரவீன்

செவ்வாய்க்கிழமைகளில் ‘மாற்றம் தேடியே’ என்னும் தலைப்பில் ஒலியேறும் நமக்குநாமே நிகழ்ச்சியை அறிவிப்பாளர் ரவீன் படைக்கிறார். தடம் தப்பி, இன்னலையும் இடரையும் அனுபவித்து பட்டறிவை படிப்பினையாகப் பெற்று வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்தை எட்ட எத்தனிக்கும் உள்ளங்களின் கரம் பற்றி கரை சேர்க்கும் உந்து தளமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

புதன்கிழமைகளில் இடம்பெறும் நமக்கு நாமே நிகழ்ச்சி ‘உறவுகள் தொடர்கதை’ என்னும் தலைப்பில் இடம்பெறுகிறது. உண்மையில் இது, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு மிகவும் பரிச்சயமான நிகழ்ச்சி ஆகும். மிகப் பழைய நிகழ்ச்சியும் கூட;

தெய்வீகன்

மின்னல் பண்பலையின் படைப்புகளில் உள்ளம் உருகும் நிகழ்ச்சி இது. நேயர்கள் தங்களின் தொலைந்த உறவைக் கண்டு கண்ணீர் மல்க, உள்ளம் உருக, ஆவல் மிக பற்றிக் கொள்ளும் இந்த அங்கத்தை தெய்வீகன் தாமரைச் செல்வன் படைத்து வருகிறார்.

வியாழக்கிழமை தோறும், ஆனந்த தேன்காற்றின்வழி இடம்பெறும் நமக்கு நாமே நிகழ்ச்சி ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்னும் தலைப்பில் இடம்பெறுகிறது. இதன் அறிவிப்பாளர் மோகன்.

மோகன்

ஒரு மாணவரின் வாழ்க்கைச் சூழலும் ஏழ்மை நிலையும் அவரின் கல்விப் பயணத்தில் தடைக் கல்லாகி விடக்கூடாது என்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களைத் தத்தெடுத்து, அவர்களின் கல்விப் பாதையில் ஒளியேற்றி வைக்கும் நிகழ்ச்சி இது.

அதைப்போல வெள்ளிக்கிழமைதோறும் ஆனந்த தேன்காற்றின் ஊடாக படைக்கபடும் நமக்கு நாமே நிகழ்ச்சியின் தலைப்பு ‘நலம்; நலமறிய ஆவல்’. மருத்துவ உதவிகளுக்காக ஏங்கித் தவிக்கும் நேயர்களுக்கு உதவும் உன்னதத் திட்டம் இந்நிகழ்ச்சியில் பொதிந்துள்ளது.

திரேசா லாசாரு

மருத்துவ உதவித் தேவைப்படும் நேயர்களையும் அவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் அன்பர்களையும் அடையாளம் கண்டு இந்த இரு தரப்பாரையும் இணைக்கும் பாலத்தைப் போன்ற இந்த நிகழ்ச்சியைப் படைப்பவர் திரேசா லசாரு.

சனிக்கிழமைகளில் ஆனந்த தேன்காற்றின் ஊடாக இடம்பெறும் நமக்கு நாமே நிகழ்ச்சி நம் மாணவ சமுதாயம் சார்ந்தது. வசதி குறைந்த மாணவர்களுக்கு இணையத்தின்வழி இலவச கல்வி வசதியை ஏற்படுத்தித் தர முனைப்பு காட்டும் இந்த நிகழ்ச்சியை ‘கற்க கசடற’ என்னும் தலைப்பில் படைப்பவர் அறிவிப்பாளர் கிஷன்.

கிஷன்

ஞாயிறுதோறும் ஒலியேறும் ஆனந்தத் தேன்காற்றில் புதிதாக இணைந்துள்ள நமக்கு நாமே நிகழ்ச்சியின் தலைப்பு ‘அன்னமிட்ட கை’. இது ஒரு சமூக நலத் திட்டம்.

நலிந்த குடும்பத்தினரை அடையாளம் கண்டு அவர்களின் பசிப்பிணியைப் போக்கும் வடலூராரின் பாணியிலான இந்தத் திட்டத்தை உள்ளடக்கியது ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலியேறும் ‘நமக்கு நாமே’. பொருள் படைத்தோரையும் தேவைப்படுவோரையும் இணைக்கும் பாலமாக இது அமைகிறது.

நளினி அச்சுதன்

சமுதாயத்திடையே மனித நேயத்தையும் உதவும் பாங்கையும் வளர்க்கும் வகையில் இந்த புதியத் திட்டத்தை ஆனந்த தேன்காற்றில் ஒலியேறச் செய்திருக்கும் மின்னல் பண்பலையின் புதிய தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு அனைத்து அறிவிப்பாளர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார் ஆனந்த தேன்காற்று தொகுப்பின் ஒருங்கிணைப்பு தயாரிப்பாளர் நளினி அச்சுதன்.

இதுகாறும் நிறைவான தமிழோடும் மனம் நிறைக்கும் இசையோடும் நேயர்களின் மனம் கவர்ந்த ஆனந்த தேன்காற்று, இனி மின்னலின் புதிய தலைமைத்துவத்தில் சமுதாய கடப்பாட்டுடன் நேயர்களை நாடுகின்றது. நேயர்கள் இன்றி நாங்கள் இல்லை. இந்த உன்னத திட்டத்தையும் நேயர்களுடன் இணைந்தே நிறைவேற்ற எண்னம் கொண்டுள்ளதாக அ. நளினி மேலும் சொன்னார்.

இந்திய சமுதாய நலம் சார்ந்து ‘நமக்கு நாமே’ சமூக நலத்திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்த ஒன்பது நாட்களிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக இந்தத் திட்டத்தின் உருவாக்குநர்  கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30-ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஆனந்த தேன் காற்று நிகழ்ச்சியில் அறிமுகம் கண்ட நமக்கு நாமே திட்டத்தை, ‘நலம், நலமறிய ஆவல்’ என்னும் நிகழ்ச்சி மூலம் திரேசா என்ற அறிவிப்பாளர் தொடக்கி வைத்தார்.

ஆகஸ்ட் 6-இல் இரண்டாம் நாளில் அவர் இரண்டாவது நிகழ்ச்சியைப் படைத்து முடித்த வேளையில் ஈஸ்வரி பிள்ளை என்ற பெண் நேயருக்கு இரண்டு செயற்கை கால்கள், ஒரு செயற்கை கை, ஒரு தானியங்கி சக்கர நாற்காலி வாங்குவதற்காகத் தேவைப்படும் 67 ஆயிர வெள்ளியில் 32 ஆயிரம் வெள்ளி சேர்ந்து விட்டதாக கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதைப்போல திங்கட்கிழமை ஆகஸ்ட் -2ம் நாள் ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சி; தகரம் இப்போ தங்கம் ஆச்சி’ எனும் தலைப்பில் சுகன்யா படைத்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக ஜோகூர் பாருவில் உள்ள ஒரு குருகுல மையத்திற்கு 20 ‘டேப்லெட்’ சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் ஆன்மிக மையம் வழங்கியதாக கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

ஏழை மாணவர்களுக்கு 1,000 மடிக்கணனிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 100 மடிக்கணினிகளுக்கான உறுதியை கொடையாளிகள் உறுதி செய்துள்ளனர். சமுதாயத்தில் நலிந்தோரின் நலம் நாடுவதற்கான இந்தத் திட்டத்தின்வழி அள்ளிக் கொடுக்க மனிதநேயமும் கொடைமனமும் கொண்ட பல்லாயிரக் கணக்கான நேயர்களை மின்னல் பண்பலை வானொலி கொண்டிருப்பதாக பெருமை கொள்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இந்திய சமுதாய மக்கள், தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் இந்தத் திட்டத்திற்கு “நமக்கு நாமே” என்று பெயர் சூட்டும் சிந்தனை குறித்தும் இந்தத் தலைப்பும் குறித்தும் மின்னல் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கம் கேட்க நேர்ந்தது.

காரணம் இந்தத் தலைப்பு 2016 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான தலைப்பு. இதை உருவாக்கியவர் கலைஞர் மு. கருணாநிதி. அவருக்கு நேற்று ஆகஸ்ட் 7 மூன்றாவது நினைவு நாள்.

தற்போதைய கொரோனா துயரக் காலத்தில் ஆர்டிஎம்-இன் கொள்கை ‘Kita Jaga Kita’ என்பதாகும். இதை மையமாக வைத்தே, நம்மை நாமே பாதுகாத்துகொள்ள வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்ட தலைப்புதான் நமக்கு நாமே என்று கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்தார்.

ஞாயிற்றுக்கிழமையில் ‘அன்னமிட்ட கை’ என்னும் தலைப்பில் நமக்கு நாமேத் திட்டம் இடம்பெறுகிறது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், சமூகப் போராளி, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையை நிறுவியவர் என்னும் பெருமைகளுக்கெல்லம் உரிய முத்துலெட்சுமி அம்மாள், தமிழுக்காகப் பாடுபட்ட பேராசிரியர் ம. நன்னன் ஆகியோரின் பிறந்த நாளான ஜூலை 30-இல் இந்த ‘நமக்கு நாமே’ சமூக நலத் திட்டத்தை மின்னல் பண்பலை வானொலி அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.