Home நாடு துங்கு அப்துல் ரஹ்மானின் சாதனைகளை நினைவு கூர்ந்தார் அன்வார் இப்ராகிம்!

துங்கு அப்துல் ரஹ்மானின் சாதனைகளை நினைவு கூர்ந்தார் அன்வார் இப்ராகிம்!

114
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் சுதந்திரத் தந்தையாகப் போற்றப்பட்டாலும், பல்லாண்டுகளாக மறக்கப்பட்ட ஒரு தலைவர் நாட்டின் முதலாவது பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான். அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் அரசாங்கம் சிறப்பு நிகழ்ச்சிகள் எதனையும் நடத்துவதில்லை.

அதற்கு முக்கியக் காரணம் துன் மகாதீர். தன்னை அம்னோவிலிருந்து விலக்கியவர் என்ற கோபமாக இருக்கலாம். 1988-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தனக்கும் துங்கு ரசாலிக்கும் இடையில் நிகழ்ந்த அரசியல் போராட்டத்தில் துங்கு அப்துல் ரஹ்மான் துங்கு ரசாலி பக்கம் ஆதரவாக இருந்தார் என்ற நிலைப்பாடு இன்னொரு காரணமாக இருக்கலாம்.

எனினும் பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்த துங்கு அப்துல் ரஹ்மானின் பிறந்த நாளை அரசாங்க நிகழ்ச்சிகளோடு சிறப்பாகக் கொண்டாடியுள்ளார் பிரதமர் அன்வார் இப்ராகிம்.

#TamilSchoolmychoice

துங்குவின் 122-வது பிறந்த நாளை இன்று அவரின் நினைவு இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தினார் அன்வார்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது “மறைந்த துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜ் ஒரு முன்னோடி தலைவர் ஆவார்; அனைவரின் மனதையும் வென்றவர். வேறுபாடுகளில் ஒற்றுமையை நோக்கிய அவரது செய்தி அவரது காலக்கட்டம் முழுவதும் ஒரே மாதிரியானதாக இருந்தது” என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“நாட்டைக் கட்டமைப்பதில் துங்கு சில அதிருப்திகளை ஏற்படுத்தக்கூடிய அஸ்திவாரங்களை வைப்பதற்கான தீர்மானங்களை எடுத்திருந்தாலும், அவர் அனைத்து இனங்களையும், மதங்களையும் நமது நாட்டின் கட்டமைப்பு உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்தார். எவரும் புறக்கணிக்கப்படுவதைத் தவிர்த்தார்” என்று அன்வார் கூறினார்.

துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மலேசியாவின் முதல் பிரதமரின் 122ஆவது பிறந்த நாளை இந்நிகழ்ச்சி ஒட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

“ஒரு மாபெரும் தலைவரை ஒரே சொல்லில் வரையறுக்க முடியாது. மலாயா, சபா மற்றும் சரவாக்கிற்கு விடுதலைக் கனவை உருவாக்கிய சிறந்த தொலைநோக்கு தலைவர் அவர். மலாயாவிற்கு 1957ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தையில் திறமையாகச் செயல்பட்டார்.

சபா மற்றும் சரவாக்கிற்கும் கூட்டாட்சி அமைப்பில் இருப்பது சிறந்த எதிர்காலத்தை வழங்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.

“ஒரு தொலைநோக்கு மனநிலை கொண்ட தலைவரே இத்தகைய எதிர்காலத்தைக் காண முடியும். கடவுள் நமக்குத் துங்குவைப் போன்ற தலைவரை வழங்கி அருள் புரிந்துள்ளார்,” என்று அன்வார் கூறினார்.

நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது

தனது இளமைக் காலங்களில், சில விஷயங்களில் துங்குவுடன் உடன்படாமலிருந்தாலும், அவர் இன ஒற்றுமையை உருவாக்கிய பெருந்தகை என்பதனை மறுப்பதற்கில்லை என்று அன்வார் தெரிவித்தார்.

தன் இளமைப் பருவத்தில் துங்குவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அன்வார் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களிடமும் அவர் அன்பு பெற்றது மறுக்க முடியாத உண்மை. அனைத்து இன மக்களின் மனதை வென்ற தலைவரை மாற்றுவது கடினம். அவர் மலாயா, சபா, சரவாக் எங்கு பேசினாலும், ஒரே கருத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மலாய், சீனர், இந்தியர், கடசான், துசுன், முருட் என அனைத்தினங்களின் ஒற்றுமையை உறுதிசெய்தார். மலேசியாவை நாம் இன்று காணும் நிலைக்கு கொண்டு வந்தது இந்த ஒற்றுமையேயாகும். நாட்டின் அஸ்திவாரங்களை – மலேசிய மொழியை அதிகாரத்துவ மொழியாக, இஸ்லாத்தை அதிகாரத்துவ மதமாக, மலாய்க்காரர்களின் உரிமைகளையும் மலாய் அரசர்களின் உரிமையையும் – உறுதி செய்திருந்தாலும், அனைத்து இனங்களையும் மதங்களையும் நாட்டின் அரசியல் சாசனம் உள்ளடக்கியதை உறுதிப்படுத்தினார்,” எனவும் அன்வார் குறிப்பிட்டார்.

இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த அஸ்திவாரங்கள் தொடக்கத்திலிருந்தே நிலைநிறுத்தப்பட்டு, பல்வேறு கலாச்சாரம் மற்றும் இனங்களை ஏற்றுக்கொண்டதன் விளைவாக மலேசியா ஒற்றுமையுடன் வளர்ந்ததாகவும், ஒரு முன்னேறிய நாடாக மாறியுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

துங்குவின் பாரம்பரியம்

மலேசிய மொழி, இஸ்லாம், மலாய்க்காரர்கள் மற்றும் மலாய் அரசர்களின் சிறப்பு அந்தஸ்து பற்றிய விமர்சனங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலானோர் இதை உண்மையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“நம்மிடையே உள்ள வேறுபாடுகளை பிளக்கும் சக்தியாக பார்க்கலாம், ஆனால் துங்கு மலேசிய மக்களின் பன்முகத்தன்மையே அதன் பலம் எனக் கண்டார்.  மாறிவரும் அரசியல் சூழ்நிலையின் பேரிலும், நாட்டின் அடிப்படை தத்துவங்களை துங்கு உறுதியாக நிறுவினார். இன்று, நாட்டின் சுதந்திரத்திற்கு அர்த்தமளிக்கும் பொறுப்பு நமக்கே. இந்த நாடு சரியான பாதையில் தொடர வேண்டும், அதன் மரியாதை உயர்த்தப்பட வேண்டும். நான் பிப்ரவரி 8ஆம் தேதி துங்குவின் பிறந்த நாளை தவறவிட்டுவிட்டேன், ஆனால் நினைவு வந்தவுடன், நோன்பு மாதத்திற்கு முன்பு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். மக்களுக்கு போராட்டத்தின் அர்த்தத்தையும், ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும், ஒரு நாட்டை கட்டியெழுப்பும் கனவையும் நினைவூட்ட வேண்டும்,” என்று அன்வார் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துங்குவின் பேத்தியான டத்தின்ஸ்ரீ ஷரீஃபா மேன்யாலாரா ஹுசைன், உரையாற்றினார். அன்வாருக்கு நினைவுச்சின்னமாக துங்குவும் அவரின் மனைவியும் டோக்கியோவில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வழங்கினார்.