
*ஜாஸ் இசை கலாச்சாரம்–பாரம்பரிய மேற்கத்திய இசையுடன் இணைந்த ‘பிளாக் ஸ்வான் ரைசஸ்‘ இசை நிகழ்ச்சி! மலேசிய இந்தியர் ரோடின் ஜே.எஸ்.குமார் முதன் முறையாக அரங்கேற்றுகிறார்!
கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்ளூர் இசைக் கலைஞராக வலம் வந்து கொண்டிருப்பதோடு, நாட்டின் மிகவும் பிரபலமான அனைத்துலக இசை விழாக்களை ஏற்பாடு செய்தவருமான ரோடின் ஜே.எஸ்.குமார் முதன் முறையாக ஜாஸ் இசை – பாரம்பரிய மேற்கத்திய இசை – இரண்டும் இணைந்த புதுமையான, தனித்துவமான இசை நிகழ்ச்சி ஒன்றை ‘பிளாக் ஸ்வான் ரைசஸ்’ (Black Swan Rises) என்ற தலைப்பில், எதிர்வரும் புதன்கிழமை 19 பிப்ரவரி 2025-ஆம் நாள் இரவு 8.30 மணிக்கு கேஎல்சிசி கட்டடத்தில் அமைந்துள்ள பிரபலமான டேவான் பில்ஹார்மோனிக் பெட்ரோனாஸ் அரங்கத்தில் படைக்கவிருக்கிறார்.
இத்தகைய நிகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றும் முதல் மலேசிய இந்தியராக ரோடின் ஜேஎஸ் குமார் திகழ்கிறார். இசைக் கலைஞராக செயல்படும் ரோடின் ஜேஎஸ் குமார் ஒரு தொழில் முனைவர் என்பதோடு, தத்துவ விவாதங்களைக் கொண்ட இரண்டு ஆங்கில நூல்களைப் படைத்த எழுத்தாளரும் ஆவார். தொழில்முறையில் அவர் ஒரு கணக்காய்வாளரும் (அக்கவுண்டன்ட்) ஆவார்.
கோலாலம்பூர் அனைத்துலக ஜாஸ் மற்றும் கலை விழாவின் (KL International Jazz And Arts Festival) இணை தோற்றுநருமான ரோடின் ஜேஎஸ் குமார், கேஎல் ஜாஸ் அண்ட் ஆர்ட்ஸ் கிளப்பின் (KL Jazz & Arts Club) தலைவருமாவார்.
2024-இல் ‘கம்ப்ரமைஸ்’ என்ற தனது முதல் இசைக் கோர்வை தொகுப்பை (ஆல்பம்) வெளியிட்ட திறமையான இசைக்கலைஞர் ஆவார். அவரின் இரண்டாவது, மூன்றாவது இசைக் கோர்வை தொகுதிகள் (ஆல்பங்கள்) புதன்கிழமை நடைபெறும் ‘பிளாக் ஸ்வான் ரைசஸ்’ இசை நிகழ்ச்சிக்குப் பின்னர் வெளியிடப்படும்.
ரோடின் ஜேஎஸ் குமார், கோலாலம்பூர், செந்துல் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவராவார்.
பன்முகத்தன்மை வாய்ந்த இந்த இசை நிகழ்ச்சி ரோடின் குமாரின் சொந்த இசை ஆக்கங்கள் கொண்டு படைக்கப்படுகிறது. மேலும் ஜாஸ் கிளாசிக்கல் இசையுடன் இணையும் தனித்துவமான இசைக்கலவை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.
ஒரு கலைஞர் தங்களது மிகவும் பிரபலமான இசைக் கோர்வைகளை அல்லது பாடல்களை இசைக்கும் பாரம்பரிய கச்சேரியை போலல்லாமல், “பிளாக் ஸ்வான் ரைசஸ்” பல்வேறு தரப்பட்ட இசைக் கருத்துக்களையும் ஆக்கங்களையும் கொண்டிருக்கும் என தனது இசை நிகழ்ச்சி குறித்து ரோடின் ஜேஎஸ் குமார் தெரிவித்தார்.
“பிளாக் ஸ்வான் ரைசஸ்” 21 பேர் கொண்ட மலேசிய இசைக் குழுவை உள்ளடக்கியது. இதில் லண்டன் மற்றும் சிட்னியைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் டேமன் பிரவுன் மற்றும் ஜேம்ஸ் ரயன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
பிரவுன் மற்றும் ரயன், அரங்கேறவிருக்கும் 70 நிமிட நிகழ்ச்சியில் ரோடின் குமாரின் 15 சொந்த இசையமைப்புகளை வழங்குவார்கள்.
ரோடின் குமார் இந்த நிகழ்ச்சியில் எலக்ட்ரிக் பேஸ் கருவியை வாசிப்பார். அவரின் சகோதரர் விஜே திசன், டிரம்ஸ் இசைக் கருவியை வாசிப்பார்.
இந்த இசை நிகழ்ச்சி ரோடினின் தனித்துவமான இசை பாணியில் ரசிகர்கள் மூழ்குவதற்கான சிறந்த வாய்ப்பாகும்.
தனது இசை நிகழ்ச்சி குறித்துப் பேசிய ரோடின் ஜேஎஸ் குமார் “கடந்த 40 ஆண்டுகளாக நான் பல்வேறு வகையான இசையைக் கேட்டு வருகிறேன். இவை நிச்சயமாக எனது சொந்த இசை உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நியோ-ஜென் என்பது எல்லைகளைக் கடந்து ஆராய்வதற்கான சுதந்திரம். அந்த அம்சத்தை நான் பயன்படுத்தியிருக்கிறேன். இதன் மூலம் வித்தியாசமான அனுபவமாக எனது இசை நிகழ்ச்சி அமையும்” எனத் தெரிவித்தார்.
‘பிளாக் ஸ்வான் ரைசஸ்’ இசை நிகழ்ச்சியில் முதன்மை நடத்துநராக (கண்டக்டராக) பணியாற்றுபவர் பேராசிரியர் ஹனாபி இமாம் ஆவார். இவர் மலேசிய இசையின் நிபுணரும் கல்வியாளருமாவார். ரோடின் குமாரின் முன்னாள் இசை ஆசிரியரும் இவர்தான்.
‘பிளாக் ஸ்வான் ரைசஸ்’ இசை நிகழ்ச்சி குறித்து கூடுதல் தகவல்களைப் பெற கீழ்க்காணும் கைப்பேசி எண்ணில் அழைக்கலாம்: