Home One Line P1 “தாய்மொழிப் பள்ளிகளுக்கு மஇகா என்றுமே அரணாகத் திகழும்” – உலகத் தாய்மொழி தினம் செய்தியில் விக்னேஸ்வரன்

“தாய்மொழிப் பள்ளிகளுக்கு மஇகா என்றுமே அரணாகத் திகழும்” – உலகத் தாய்மொழி தினம் செய்தியில் விக்னேஸ்வரன்

2339
0
SHARE
Ad

“பிப்ரவரி 21-ஆம் தேதி உலகம் முழுவதும் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது நாட்டில் நமது தாய்மொழியான தமிழ் மொழி இத்தனை ஆண்டுகளாக நிலைத்திருக்க உயிர்நாடியாகவும், உத்வேகமாகவும் திகழும் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்கவும், நீடிக்கவும், வளர்ச்சி பெறவும் மஇகா என்றென்றும் துணை நிற்கும், அரணாகத் திகழும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, மஇகா தேசியத் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் விடுத்திருக்கும் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

“கடந்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிவியல் மற்றும் கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து இன்று வரையில் அந்த நாளில் தாய்மொழி தினம் உலகம் எங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1947-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டபோது இன்றைய வங்காளதேசமும் அந்நாட்டில் அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரோடு இணைந்திருந்தது. முஸ்லீம்களாக இருந்தாலும் தங்களின் தாய்மொழியான வங்காள மொழி மீது பாசமும் பிணைப்பும் கொண்டிருந்த வங்காள தேச மக்களிடையே உருது மொழிதான் பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக இருக்கும் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து வங்காள தேசத்தில் வங்காள மொழியே தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நடந்த போராட்டங்களின் உச்சகட்டமாக 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி நடந்த பிரம்மாண்டமான மக்கள் போராட்டத்தில் ஆட்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாய்மொழிக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கொள்ளும் விதமாகத்தான் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் யுனெஸ்கோ பிப்ரவரி 21-ஆம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக அறிவித்தது. இன்றும் வங்காளதேசத்தில் இந்த நாள் பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது” எனவும் விக்னேஸ்வரன் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதற்கான காரணத்தையும் தனது அறிக்கையில் விவரித்தார்.

“மலேசியாவைப் பொறுத்தவரை நமது சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சியில் அங்கம் வகித்த மஇகா நமது நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்க தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கிறது. தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில்தான் புதிதாக ஆறு தமிழ்ப் பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டு, தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது என்பதை இந்த வேளையில் நினைவு கூர விரும்புகிறேன். நமது தாய்மொழித் தமிழ் இந்நாட்டில் நிலைத்திருக்க அடித்தளம் அமைத்துத் தந்திருக்கும் தமிழ்ப் பள்ளிகளின் நலன்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மஇகா என்றுமே போராடி வந்துள்ளது. அந்த அடிப்படையில் தமிழ், சீனப் பள்ளிகளை ஒழித்துக் கட்டவேண்டும் என்று ஒரு சிலர் தொடர்ந்த வழக்கில் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க அண்மையில் மஇகாவும் ஒரு தரப்பாக தன்னை இணைத்துக் கொள்ள நீதிமன்றத்தில் விண்ணப்பித்து வெற்றியும் பெற்றது. அந்த வழக்கு மட்டுமல்ல, இதுபோன்று எத்தனை இடர்கள், இன்னல்கள் நமது தாய்மொழிக்கோ, தமிழ்ப் பள்ளிகளுக்கோ வந்தாலும் அதற்காக மஇகா, ஆளும் கட்சியாக இருந்தாலும் – எதிர்க்கட்சியாக இருந்தாலும் – என்றும் துணிந்து போராடும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், மலேசியாவில் தாய்மொழி தமிழுக்காக, பல முனைகளிலும் பாடுபட்டு வரும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பத்திரிக்கைகள், தமிழ் மொழி இயக்கங்கள் என அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புக்கும் உழைப்புக்கும் மஇகா சார்பிலும் தனது தனிப்பட்ட முறையிலும் நன்றியையும் விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.

“தாய்மொழியாம் அன்னைத் தமிழ் நிலைக்க அனைவரும் உறுதி கொள்வோம். பாடுபடுவோம்” என்றும் தனது அறிக்கையில் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.