கோலாலம்பூர்: அஸ்மின் அலியுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தியவர்களின் குற்றச்சாட்டுகளை டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான பிகேஆர் குழு கடுமையாக மறுத்துள்ளனர்.
துன் டாக்டர் மகாதீர் முகமட்டை அவரது தவணைக் காலம் முடிவதற்குள் வீழ்த்த முயன்றவர்கள்தான் உண்மையான துரோகிகள் என்று ஒரு கூட்டு அறிக்கையில் அது கூறியது.
“பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கக் கொள்கைகளை செயல்படுத்துவதை விட பிரதமர் பதவி குறித்து அதிக அக்கறை கொண்டிருந்ததாலும், இடைக்காலத்தில் பிரதமரை வெளியேற்ற முற்பட்டவர்களும்தான் துரோகிகள்” என்று அந்த அறிக்கை நேற்று திங்கட்கிழமை இரவு முகமட் அஸ்மினின் முகநூல் பக்கத்தில் வெளியானது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, முகமட் அஸ்மின் மற்றும் அவரது குழு பிரதமரை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான, செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
” 2030 தூரநோக்கு திட்டத்தில் பொதிந்துள்ள மக்களின் சமூக-பொருளாதார மட்டத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க கொள்கைகளின் நிலைத்தன்மை குறித்து மக்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதே எங்கள் நடவடிக்கை” என்று அது கூறியுள்ளது.
டாக்டர் மகாதீர் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டை (ஏபெக்) நடத்த நாட்டை தயார்படுத்திக்கொண்டிருப்பதால், அவருக்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
“இந்த மாநாடு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் மக்களின் எண்ணங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜனநாயக மாற்றத்தின் மாதிரியாக மலேசியாவுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.”
“அதிகாரப் பரிமாற்றத் தேதியைத் தீர்மானிக்க பிரதமரை வற்புறுத்துவதற்கான முயற்சி பிரதமரை வீழ்த்துவதற்கான ஒரு தீய முயற்சி என்று நாங்கள் நம்புகிறோம்.”
“ஏனென்றால், பிரதமரை தவணைக் காலம் முடியாத வரையில் மாற்றுவது மக்களுக்கும் முதலீட்டாளர் சமூகத்திற்கும் தவறான சமிக்ஞையை அளிக்கிறது. தவணைக் காலம் முடியாமல் அதிகாரத்தை மாற்றுவது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் கருத்துக்களின் தொடர்ச்சியை அச்சுறுத்தும்” என்று அது கூறியது.