கோலாலம்பூர் – தற்போது நாட்டில் நடந்து வரும் அரசியல் நடப்புகளைத் தொடர்ந்து சபா, சரவாக் மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள ஓர் இரகசிய இடத்தில் சரவாக் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் என்ற முறையில் நீண்ட காலமாக சரவாக் கட்சிகளின் தலைவர்களுடன் அணுக்கமானத் தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்பதால் சரவாக் மாநிலத் தலைவர்களுக்கும் புதிய அரசாங்கத்தை அமைக்க முற்பட்டிருக்கும் தேசிய முன்னணியை உள்ளடக்கிய அணியினருக்கும் இடையில் நடுவராக நஜிப் செயல்பட்டு வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நேற்று மாலையில் அம்னோ கட்சித் தலைவர்களுக்கும் பாஸ் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் நஜிப் கலந்து கொண்டார்.