Home One Line P1 12 பேர் விடுதலை மறுபரிசீலனையா? உள்துறை அமைச்சரின் முடிவுக்கு வேதமூர்த்தி கண்டனம்

12 பேர் விடுதலை மறுபரிசீலனையா? உள்துறை அமைச்சரின் முடிவுக்கு வேதமூர்த்தி கண்டனம்

1043
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தீவிரவாத  தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர்(ஏ.ஜி.) எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்யப் போவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ  ஹம்சா சைனுடின் எடுத்துள்ள முடிவு, மனித உரிமை தொடர்பான அடிப்படை கோட்பாடுகளுக்கே முரணானது என்றும் அரசியல் சாசனத்திற்கு முணானது என்றும் மலேசிய முன்னேற்றக் கட்சியின்(எம்.ஏ.பி.) தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சட்டத்துறை தலைவர், ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவும்  அதைத் திரும்பப் பெறவும் நம் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு அனுமதிக்கிறது. இதை, அரசியல் சாசனமும் தீர்க்கமாக வரையறை செய்துள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கைப் பொறுத்தவரை, பன்னிரு பேரையும் கைது செய்த சூட்டோடு,  அவர்களுக்கு எதிரான சாட்சிகளும் ஆதாரங்களும் வலுவாக இருப்பதாக காவல் துறையின் புக்கிட் அமான் தீவிரவாத நடவடிக்கை தடுப்புப் பிரிவு அதிகாரி டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை நாட்டின் பிரதான ஊடகங்களில் அடித்துப் பேசினார். குறிப்பாக, சம்பந்தப்பட்ட 12 பேரில் ஒருவர், ஸ்ரீலங்கா தூதரகத்தில் குண்டு வைக்க திட்டமிட்டதாகவும் அயூப் கான் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். ஆனால், ஐயத்திற்கு உரிய இந்தக் குற்றச்சாட்டுகள் யாவும் 12 பேருக்கும் எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனுவில் குறிப்பிடப்படவில்லை. மாறாக, கைப்பேசியில் அல்லது முகநூல் பக்கத்தில் பிரபாகரனின் படத்தை வைத்திருந்தனர் என்று சுமத்தப்பட்ட சாரமற்ற குற்றச்சாட்டுகள் சொஸ்மா சட்டத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சட்டத் துறைத் தலைவர் மிகவும் பொருத்தமான முடிவை எடுத்தார்” என வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலவுவதால், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் ஒருவரும் இல்லை என்றும், காவல் துறையினர்கூட அரசியல் சட்டத்திற்கும் நீதி பரிபாலன முறைமைக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்றும் வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“எனவே, ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் எம்.ஏ.பி. என்றென்றும் உறுதியாக இருக்கும் அதேவேளை, சம்பந்தப்பட்ட பன்னிருவருக்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையைத் தற்காப்பதில் உறுதியாக இருக்கும்” என்றும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான பொன்.வேதமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.