Home நாடு வேதமூர்த்தி, சாஹிட் தலைமையிலான தேசிய முன்னணிக்கு ஆதரவு

வேதமூர்த்தி, சாஹிட் தலைமையிலான தேசிய முன்னணிக்கு ஆதரவு

669
0
SHARE
Ad

கோலாலம்பூர் :15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மலேசிய அரசியலிலும் சில எதிர்பாராத திருப்பங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன.

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவருமான பொன் வேதமூர்த்தி வரும் பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தலைமையிலான தேசிய முன்னணியை ஆதரிக்கவிருப்பதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொலி ஒன்றின் வழி வேதமூர்த்தி இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார். பக்காத்தான் ஹாரப்பானுடன் கூட்டணி அமைக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் வேதமூர்த்தி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தியர்களின் தேவைகளையும், உரிமைகளையும் பூர்த்தி செய்வதற்காக தனது போராட்டம் தொடரும் என்றும் அந்த நோக்கத்திலேயே தேசிய முன்னணியில் இணைவதாகவும் வேதமூர்த்தி கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் வரும் பொதுத் தேர்தலில் வேதமூர்த்திக்கு தேசிய முன்னணி சார்பில் தொகுதி ஒன்று ஒதுக்கப்படும் என்ற ஆரூடங்களும் எழுந்துள்ளன.

தீபாவளி வருகையில் தொடங்கியதா அரசியல் உறவு?

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, பொன்.வேதமூர்த்தியின் இல்லத்திற்கு தீபாவளியை முன்னிட்டு வருகை மேற்கொண்டார். அந்த வருகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

அந்தப் படங்களில் இருவருக்கும் இடையில் காணப்படும் நெருக்கத்தைத் தொடர்ந்து எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் வேதமூர்த்தி சார்ந்துள்ள மலேசிய முன்னேற்றக் கட்சியும், ஹிண்ட்ராப் இயக்கமும் இணைந்து தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வர் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

அதை உறுதி செய்யும் விதத்தில் தான் வெளியிட்ட காணொலியில் சாஹிட் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியை தான் ஆதரிப்பதாக வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.

மலேசிய முன்னேற்றக் கட்சிக்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றாலும் 2018 பொதுத் தேர்தலில் நடந்தது போன்று, தேர்தல் களத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டு விட்டு பின்னர் அதன் பிரதிநிதிகள் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் பெறலாம்.

வேதமூர்த்தியும் 2018-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் மகாதீரையும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியையும் ஆதரித்தார். ஆனால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை.

துன் மகாதீர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் செனட்டராகவும் முழு அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரின் செனட்டர் பதவிக் காலத்தை இரண்டு தவணைகள் வகித்து விட்டதால் இனியும் அவர் செனட்டர் பதவிக்கு நியமிக்கப்பட முடியாது. எனவே, ஏதாவது ஒரு தொகுதியில் அவர் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.