ஜோர்ஜ் டவுன்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கையாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நாளை புதன்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட வணிக நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு முதல்வர் சோவ் கோன் யியோவ் கூறுகையில், பினாங்கில் உள்ள அனைத்து வணிகங்களும் நாளை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட முடியும் என்று குறிப்பிட்டார்.
“பினாங்கு வணிக வளாகங்களுக்கு பொருத்தமான செயல்பாட்டின் வழக்கமான அடிப்படையில் இந்த நேர வரம்பை நாங்கள் முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முழுவதும், குறிப்பாக பினாங்கில் இந்த காலகட்டத்தில் அதிக கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பினாங்கில் வசிப்பவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சோவ் கேட்டுக் கொண்டார்.
மாநிலத்தில் தற்போது 90 விழுக்காடு பேர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்குவதாக காவல் துறை தெரிவித்துள்ளது என்று சோவ் கூறினார்.
மாநிலத்தில் இந்த நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு இணக்கும் விகிதத்தை அதிகரிக்க பொதுமக்கள் மற்றும் அனைத்து மாநில அதிகாரிகள் மற்றும் முகவர் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.