கோலாலம்பூர் – உள்ளூர் இசைக் கலைஞர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வண்ணம் தொடர்ந்து தங்களின் இசை முயற்சிகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் மலேசியாவில் இசைத் துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டு முத்திரை பதித்திருக்கும் ‘இசை முரசு’ இளவரசு இசையில், கவிஞர் முகிலனின் அழகிய வரிகளில் இளம் பாடகர் அருள்வேந்தன் குரலில் உங்கள் இதயத்தை வருடி செல்லும் இசை ஓவியமாக “ஒரு வார்த்தை பேசு பெண்ணே” என்ற இசைப்பாடல் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 27) முதல் வெளியீடு காண்கிறது.
யூடியூப் தளத்தில் வைகறை ஸ்டூடியோ அலைவரிசைக்காக ஏ.கே. புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் தயாரித்திருக்கும் “ஒரு வார்த்தை பேசு பெண்ணே” இசைப்பாடல் பதிவேற்றம் கண்டிருக்கிறது.
பாடலைப் பாடியிருக்கும் அருள்வேந்தனின் குரல் பிசிறில்லாமல் ஒலிக்கிறது. தமிழ் உச்சரிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. முறையான சங்கீதப் பயிற்சி பெற்றவர் என்பது அவர் பாடலைப் படைத்திருக்கும் விதத்தில் உணர முடிகிறது.
கேட்டவர்களை மகிழ்வித்திருக்கும் இந்த இசைப் பாடல் அனைவரையும் மகிழ்விக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றனர் இந்தப் பாடலை உருவாக்கிய குழுவினர். உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் இசை ஆர்வலர்களுக்கும், உள்ளூர் கலைஞர்களுக்கும் பகிருங்கள் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த இசைப் பாடலுக்கான இசையமைப்பை இசை முரசு இளவரசு உருவாக்கியிருக்கிறார். கீபோர்ட் இசைக் கருவியை எம்.மோசஸ் கையாண்டிருக்கிறார். இசைக் கலவையை டி.வினோத் கவனித்திருக்கிறார்.
வைகறை ஸ்டூடியோ யூடியூப் அலைவரிசையின் பின்தொடர்பாளராகப் பதிந்து கொள்வதன் மூலம் நீங்கள் அவர்கள் வெளியிட்டிருக்கும், இனி தொடர்ந்து வெளியிடவிருக்கும் இசைக் கோர்வைகளையும் இரசித்து மகிழலாம்.
“ஒரு வார்த்தை பேசு பெண்ணே” இசைப் பாடல் கிள்ளான் வைகறை ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கூடுதல் தகவல்களுக்கு : செல்பேசி எண் +6016 3949265
“ஒரு வார்த்தை பேசு பெண்ணே” இசைப் பாடல் காணொளியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பின் வழி கண்டு மகிழலாம்: