கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அனைவருக்கும் பொதுவானது, பிரமுகர்களுக்கென தனிச் சலுகைகள் கிடையாது என்பதை நிரூபிக்கும் வண்ணம் சட்டங்களை மீறியதற்காக சுகாதாரத் துணை அமைச்சர் நூர் அஸ்மி கசாலியும் பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் ரஸ்மான் சக்காரியாவும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
பேராக் மாநிலக் காவல் துறையின் தலைவர் ரசாருடின் ஹூசேன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் என ஊடகங்கள் தெரிவித்தன.
கெரிக் (பேராக்) கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றத்தில் இன்று அவர்கள் குற்றம் சாட்டப்படுகின்றனர்.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி லெங்கோங்கிலுள்ள இஸ்லாமியப் பள்ளி ஒன்றுக்கு வருகை தந்தபோது எடுத்த புகைப்படங்களை சுகாதார துணையமைச்சர் நூர் அஸ்மி கசாலி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அந்தப் படங்களில் சுமார் 20 பேர்களுடன் அவர் நெருக்கமாக உணவருந்திக் கொண்டிருந்தார்.
அவர்களில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரஸ்மான் சக்காரியாவும் ஒருவராவார்.
அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவர் மீதான கண்டனங்கள் எழுந்தன.