Home நாடு “சிகை அலங்கார நிலையங்களின் பிரச்சனைகளை கவனிப்பீர்” – எம்ஏபி கட்சியின் இளைஞர் பிரிவு கோரிக்கை

“சிகை அலங்கார நிலையங்களின் பிரச்சனைகளை கவனிப்பீர்” – எம்ஏபி கட்சியின் இளைஞர் பிரிவு கோரிக்கை

850
0
SHARE
Ad

கோலாலம்பூர்: “மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இணங்க நாட்டிலுள்ள சிகை அலங்கார நிலையங்கள் கடந்த பத்து வாரங்களாக மூடிக் கிடக்கின்றன. எனினும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தி வருகின்றனர். இதனால் வருமானம் இன்றி அவர்கள் நட்டமடைந்து வருகின்றனர்.  அவர்களின் பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும்” என்று மலேசிய முன்னேற்ற கட்சி (எம்ஏபி)  இளைஞர் பிரிவைச் சேர்ந்த மோகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கவும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவும் முடி திருத்தும் கடையை மூடி வைத்துள்ளதுடன் மாதக் கணக்கில் நட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் முடிதிருத்தும் நிலைய உரிமையாளர்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியாமல் அல்லலுற்று வருகின்றனர் என்பதையும் மோகன் சுட்டிக் காட்டினார்.

“கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு தேசிய அளவில் விதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கூறாக நாட்டில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் முடப்பட்டுள்ளன. தற்பொழுது பத்தாவது வாரமாக முடிதிருத்தும் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலைமையில் பொதுவெளியில் தென்படுகின்ற தலைவர்களும் அதிகாரிகளும் நன்றாக முடி அலங்காரம் செய்துள்ளதைக் காண முடிகிறது. முடிதிருத்தும் கடைகள் எல்லாம் பூட்டிக் கிடக்கும் வேளையில் இது எப்படி சாத்தியமாகிறது?” என்று மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

#TamilSchoolmychoice

“எங்களைப் பொறுத்தவரை மத்தியக் கூட்டரசின் உத்தரவை மதித்து, கொரோனா பரவலைத் தடுப்பதில் எங்களுக்கும் உள்ள கடப்பாட்டை உணர்ந்து கடைகளை மூடித்தான் வைத்திருக்கிறோம். மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினர்கூட அரசாங்க சட்டத்தை மீறுவதில்லை. அதேவேளை, எங்கள் உறுப்பினர்கள் மாதக் கணக்கில் வருமானம் இல்லாமல் முடி திருத்தும் நிலையங்களுக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு சார்பில் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால் இதற்கு அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தால் அது முடி திருத்தும் நிலைய உரிமையாளர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும் என்று ஒருசில சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்” என்றும் இதன் தொடர்பில் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.