Home நாடு வேதமூர்த்தியின் மலேசிய முன்னேற்றக் கட்சி எந்தக் கூட்டணியில்?

வேதமூர்த்தியின் மலேசிய முன்னேற்றக் கட்சி எந்தக் கூட்டணியில்?

735
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பொன்.வேதமூர்த்தி தலைமையிலான மலேசிய முன்னேற்றக் கட்சியும் ஹிண்ட்ராஃப் இயக்கமும் 2018 பொதுத்தேர்தலில் துன் மகாதீர் கூட்டணியில் இணைந்து பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டன. அவர்கள் அதிகாரப்பூர்வ உறுப்பியக் கட்சியாக கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படா விட்டாலும் துன் மகாதீருக்கு முழுமையான ஆதரவை வழங்கினர்.

அவர்களுக்குத் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றாலும் நாடு முழுக்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரங்களையும் வேதமூர்த்தி குழுவினர் மேற்கொண்டனர்.

பொதுத்தேர்தல் முடிந்து பிரதமரான மகாதீர் யாரும் எதிர்பாராத வகையில் வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவியை வழங்கினார். ஆனால் 15ஆவது பொதுத்தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் தங்களை இணைத்துக்கொள்ள அன்வார் இப்ராஹிம் மறுத்துவிட்டார் என வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து ஜசெகவின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக், மலேசிய முன்னேற்றக் கட்சி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைவதற்கு விண்ணப்பம் எதனையும் செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சுகுமன் நாராயணன் விடுத்த அறிக்கையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைய தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பட்டியலிட்டிருந்தார்.

2020ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோனுக்குக் கடிதம் சமர்ப்பித்திருந்ததாக சுகுமன் தெரிவித்தார். வேதமூர்த்தி நேரடியாக சைஃபுடின் நசுத்தியோனைத் தொடர்புகொண்டபோது பக்காத்தான் தலைவர்கள் மன்றத்தின் கவனத்திற்கு இந்த விண்ணப்பம் கொண்டுவரப்படும் எனத சைஃபுடின் தெரிவித்தார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதன்பிறகு பல கடிதங்களும் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டாலும் பக்காத்தான் கூட்டணியில் இந்தியர் சார்பு கட்சி என்ற முறையில் மலேசிய முன்னேற்றக் கட்சியைச் சேர்த்துக்கொள்ள முடியாது என அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் என வேதமூர்த்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மலேசிய முன்னேற்றக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தொடர்புகொண்டபோது கண்டிப்பாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் நாங்கள் இணையப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்காக மட்டுமன்றி இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நீண்ட கால அடிப்படையில் பூர்த்திசெய்யும் வண்ணம் சில முடிவுகளை எடுக்க மலேசிய முன்னேற்றக் கட்சி திட்டமிட்டிருக்கிறது. அந்த முடிவுகளை நாங்கள் விரைவில் அறிவிப்போம் என வேதமூர்த்தி தெரிவித்தார்.