கோலாலம்பூர் : அம்னோவில் நிகழ்ந்து வரும் பல்வேறு போராட்டங்கள், மாற்றங்களுக்கு இடையில் அனைவருக்கும் பொதுவான – அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக – பாரமான அரசியல் மூட்டைகள் எதையும் சுமந்து கொண்டிருக்காத தலைவராக- பார்க்கப்படுபவர் அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹாசான்.
முகமட் ஹாசானுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மொகிதின் யாசின் முன்வந்தார் – என அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஆச்சரியகரமான தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.
எனினும் இது குறித்து பதலளிக்கவோ, மேலும் தகவல் பகிரவோ முகமட் ஹாசான் மறுத்துள்ளார்.
“நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கட்சியின் முடிவை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் முடிவுகள்” என்று மட்டும் முகமட் ஹாசான் கூறியுள்ளார்.
இவ்வாறாக கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டும், கொள்கைகளுக்கு ஏற்பவும் அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்து வருவதால் அவர் மீதான மதிப்பீடும், அபிமானமும் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களிடையே அதிகரித்து வருவதைக் காண முடிவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
முகமட் ஹாசான் துணைப் பிரதமர் பதவியை மறுத்ததைத் தொடர்ந்தே இஸ்மாயில் சாப்ரியை இறுதிக்கட்ட அரசியல் வியூகமாக மொகிதின் யாசின் துணைப் பிரதமராக ஜூலை 7-ஆம் தேதி நியமித்திருக்கிறார்.