கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசாவுக்கு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய காரணத்திற்காக 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டு அந்த அபராதத்தையும் அவர் செலுத்தியிருக்கிறார் என டாங்க் வாங்கி காவல் நிலையத்தின் உயர் அதிகாரி அறிவித்திருக்கிறார்.
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியை கோலாலம்பூரிலுள்ள அவரின் இல்லத்திற்குச் சந்திக்கச் சென்றது – அவரோடு ஒன்றாக உணவருந்தியது – ஆகிய காரணங்களால் அனுவார் மூசா கடந்த சில நாட்களாக இணைய வாசிகளின் கடுமையான சாடலுக்கு உள்ளானார்.
அனுவார் மூசாவுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு மீறலுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் தனிநபர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய காரணத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது உணவகங்களிலும், பொது இடங்களிலும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதத்தில் அவர் வேறு வட்டாரத்தைச் சேர்ந்த இருவருடன் மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் சர்ச்சைக்குள்ளானது. எனினும் அந்த சம்பவத்திற்காக அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.