Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : “ராமராஜன் 2.0” கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு

ஆஸ்ட்ரோ : “ராமராஜன் 2.0” கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு

447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களும் தற்போது மலேசிய இரசிகர்களிடையே பிரபலமாகி வருகின்றன. கதையம்சத்திலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் நமது உள்நாட்டுத் தொலைக்காட்சித் தொடர்கள் தொடர்ந்து மேம்பாடடைந்து வருகின்றன. உள்நாட்டுக் கலைஞர்களின் நடிப்புத் திறனும் நாளுக்கு நாள் மெருகேறி அவர்களுக்கென இரசிகர் கூட்டங்களும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன.

அண்மையில் வெளிவந்து அனைத்துத் தரப்பு இரசிகர்களையும் கவர்ந்த தொலைக் காட்சித் தொடர், ராமராஜன். ஒரு நாயை மையமாக வைத்து சுவாரசியமான திரைக்கதை பின்னப்பட்டிருந்தது.

அந்தத் தொடருக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் அதன் இரண்டாவது பருவத் தொடர் ஆஸ்ட்ரோவில் அண்மையில் ஒளியேறி இரசிகர்களிடையே பரவலாக வரவேற்பையும் பெற்றது. அப்போது பார்க்கத் தவறியவர்கள், தற்போது ராமராஜன் தொடரின் முதலாவது, இரண்டாவது பருவத் தொடர்களை (சீசன்) ஆஸ்ட்ரோ டிமாண்ட் அலைவரிசையில் கண்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice

அந்தத் தொடரில் பணியாற்றிய கலைஞர்கள் சிலரின் அனுபவங்களை இங்கே காணலாம்:

கபிலன் பூலோந்திரன், இயக்குநர்

கபிலன் பூலோந்திரன்
  1. ராமராஜன் இரண்டாவது சீசனை இயக்குவதற்கான உங்களின் உத்வேகம் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இரசிகர்கள் ‘ராமராஜன்’ தொடரை இரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் சீசன் 1-ஐ முடிக்கும் பொழுது சீசன் 2-க்கானத் தொடர் உள்ளடக்கத்தை இணைத்துக் கொண்டோம். எங்களுக்கு கிடைத்த மகத்தான ஆதரவினால் இரசிகர்களுக்குச் சீசன் 2-ஐப் படைக்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், தொழில்நுட்பக் குழு மற்றும் கலைஞர்களின் அயராத முயற்சிகளுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். எங்களின் படைப்பை இரசிகர்களுக்குக் கொண்டுச் சேர்க்க வாய்ப்பு வழங்கிய ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசைக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்.

  1. திரையில் இரண்டு செல்லப்பிராணிகளுடன் பணிபுரிந்த உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
கபிலன் பூலோந்திரன்

ஒரு செல்லப்பிராணியுடன் பணிபுரிவது ஏற்கனவே ஒரு வேடிக்கையான அனுபவத்தைத் தந்தது. எங்களில் பலர் செல்லப்பிராணி விரும்பி என்பதால் ராமராஜன் (ஃபாக்ஸி) மற்றும் பாப்பம்மா (தெடி) இருவரும் படப்பிடிப்பு இடத்தில் இருந்தது எங்களுக்குச் சொர்க்கம் போலிருந்தது. ஏற்கனவே படப்பிடிப்புச் சூழலுக்கு ராமராஜன் பழக்கப்பட்டிருந்ததாலும் இம்முறை மூத்த கலைஞராக இருந்ததாலும் இந்தப் பருவத்தில் அதைக் கையாள மிகவும் எளிதாக இருந்தது. இருப்பினும், பாப்பம்மா எங்களுடன் பழக சிறிது காலம் எடுத்துக் கொண்டது. மேலும், ராமராஜனைக் காட்டிலும் அது மிகவும் விளையாட்டுத் தன்மைக் கொண்டது. எங்களின் முழுப் பயணமும் மறக்கமுடியாத ஒரு தருணமாக அமைந்தது. மேலும், அவர்களின் முயற்சிகள் மற்றும் வேதியியலைத் (கெமிஸ்ட்ரி) திரையில் காணலாம்.

  1. ராமராஜன் 2.0 தொடரில் இரசிகர்கள் எதை எதிர்பார்க்கலாம்?

செல்லப்பிராணியை முதன்மைக் கதாபாத்திரத்தில் சித்தரிக்கும் தொடரில் நாங்கள் முதல் முறையாகப் பணியாற்றியதால் ‘ராமராஜன் சீசன் 1’ எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால், நல்லப் படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது. எது வேலை செய்யும், எது வேலை செய்யாது என்பது எங்களுக்கு தெரியும். சீசன் 2 மிகவும் அற்புதமானத் திருப்பங்களைக் கொண்டிருக்கும். எனவே, நகைச்சுவை மற்றும் வேடிக்கையை இது இரட்டிப்பாக்கும். இந்தத் தொடரில் இரசிகர்கள் பல உணர்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.

தாஷா கிருஷ்ணகுமார், நடிகை:

தாஷா கிருஷ்ணகுமார் – ராமராஜன் தொடரின் நடிகை
  1. ராமராஜன் 2.0 தொடரில் நீங்கள் ஏற்ற கதாப்பாத்திரத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்?

இந்தத் தொடரில் நான் “பூர்வா” என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். ஒரு தைரியமான, சுயாதீனமான, மற்றும் தனது சொந்தக் கொள்கைகளுடன் தனது வாழ்க்கையை வாழும் ஒரு பெண்ணாக வலம் வந்தேன். வெளியில் அவள் கடுமையாகக் காணப்பட்டாலும் மனதளவில் மென்மையானக் குணம் படைத்தவள். குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் எதிர்க்கொண்ட அச்சங்கள், வெளியுலகத்திலிருந்துத் தன்னைப் பாதுகாக்கும் கவசத்தைப் பயன்படுத்த வித்திட்டன.

தனது செல்லப்பிராணி, ராமராஜனைச் சந்திக்கும் வரை அவளது வாழ்க்கை மந்தமாக இருந்தது. இருப்பினும், இப்பருவத்தில், அவளது சவால்கள் அதிகரித்துள்ளன. தன் தந்தையைக் கவனித்துக்கொள்வது, தன் சகோதரியின் நல்வாழ்வைப் பேணிக்காப்பது, தன் வேலை மற்றும் காதல் வாழ்க்கையை நிர்வகிப்பது என பல பொறுப்புகளை அவள் ஏற்க வேண்டியிருந்தது.

அவளதுப் பொறுப்புகளினால் சவால்கள் அதிகரித்தாலும் இப்பருவம் அச்சவால்களைச் சமாளிப்பதில் அவள் எவ்வளவு வலிமையாகச் செயல்படுகிறாள் என்பதைச் சித்தரிக்கின்றது. இந்தப் பருவத்தின் முடிவில், பலர் பூர்வாவுடன் தங்களைத் தொடர்புபடுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும், அவளுடைய வலிமை மற்றும் ராமராஜனுடன் அவள் பகிர்ந்துக் கொள்ளும் அழகானப் பிணைப்பு ஆகியவற்றால் ஊக்குவிக்கப்படுவர் என்றும் நான் நம்புகிறேன்.

  1. இரண்டு செல்லப்பிராணிகளுடன் இணைந்து நடித்த உங்களின் அனுபவம் யாவை?

நான் ஒரு செல்லப்பிராணி விரும்பி. அவ்வகையில், முதல் முறையாக செல்லப் பிராணிகளுடன் இணைந்து நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றுதான் கூறுவேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. இதன் மூலம் செல்லப் பிராணிகளுடன் ஒரு பிணைப்பை உருவாக்குவதற்காக நான் பயிற்சியில் கூடக் கலந்துக்கொண்டேன். ஃபாக்ஸி (ராமராஜன்) தனது உரிமையாளருடன் மிகவும் நெருக்கமாக இருந்தது.

குறுகியக் காலத்தில், அதே அளவிலான அதன் நம்பிக்கையையும் அன்பையும் என் மீது பெறச் சற்றுக் கடினமாக இருந்தது. ராமராஜனும் நானும் ஒரு அழகானப் பிணைப்பைத் திரையில் பகிர்ந்துக் கொண்டதால் அனைத்து முயற்சிகளும் படப்பிடிப்பின் போது பலனளித்தன. ஒரு காட்சியில், நான் ராமராஜனைக் கட்டிப்பிடித்து என் தந்தையைப் பற்றி நினைத்தேன். அப்பொழுது, ராமராஜனின் அரவணைப்பை உணர்ந்தேன், மறைந்த என் தந்தையை நினைவுக் கூர்ந்தேன், தானாகவே என் கண்களிலிருந்துக் கண்ணீர் வடிந்தது. அக்காட்சி என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு காட்சி என்றால் அது மிகையாகாது.

  1. இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

இந்த அற்புதமான வாய்ப்பிற்காக ஜாங்ரி புரொடக்‌ஷன்ஸ் ஹவுஸ் மற்றும் ஆஸ்ட்ரோவுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த அணி ஒரு கனவு அணியாக எனக்கு இருந்துள்ளது – அனைத்து நடிகர்களும் குழுவினரும் அளவற்ற அன்பையும் ஆதரவையும் வழங்கினர். இது எனக்கு ஒரு வீடு போல்தான் இருந்தது. அதுமட்டுமின்றி, தோக்கோ சத்தியா சார், டேவிட் சார் மற்றும் பென் ஜி சார் போன்ற மூத்தக் கலைஞர்களுடன் திரையைப் பகிர்ந்துக் கொண்டது ஓர் ஆசீர்வாதம் என்றுதான் கூறுவேன்.

இந்தச் சீசன் ஒரு உணர்ச்சிவசப்பட்ட ரோலர் கோஸ்டர் சவாரி ஆகதான் இருக்கும். இயக்குநரின் இலக்கை அடைய அனைவரும் சிறந்ததை வழங்கினர். எங்களுக்கு அளவற்ற ஆதரவையும் அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கு இவ்வேளையில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். பல இளம் பெண்கள் தங்களின் கனவுகளைத் தொடர ‘பூர்வா’ கதாபாத்திரம் ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.