கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இப்போது அதன் நான்காவது கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நாடு இப்போது கொவிட்-19 பாதிப்பிலிருந்து மீட்கும் கட்டத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நோய் பரவுவதைத் தடுப்பதில் அரசாங்கத்தின் சார்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இந்த பாதிப்பை குறைத்தும், சமன் செய்தும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 18 அன்று நாடு முழுவதிலும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விதிக்கப்பட்டதிலிருந்து, நேற்று மதியம் நிலவரப்படி, கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 31-ஆக பதிவானது. இது மிகக் குறைவு என்று சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
இதன் விளைவாக செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு முழு சக்தியுடன் செயல்பட டாக்டர் நூர் ஹிஷாம் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அமைச்சின் நிலையான இயக்க நடைமுறை எப்போதும் கவனிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“நோயின் தாக்கத்தைக் குறைப்பதும், கொவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதும் மக்களின் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு வெற்றியாகும்” என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.