மும்பை – கொவிட்19 பாதிப்புகளால் வருமானம் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிதி உதவி திரட்டும் நோக்கில் இந்திய நட்சத்திரங்கள் இணைந்து இணையம் வழி கலை நிகழ்ச்சி ஒன்றை நேரலையாக ஒளிபரப்பினர். “ஐ போர் இந்தியா (‘I For India’) என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து பங்கேற்றதோடு இந்தக் கலைநிகழ்ச்சியின் வழி கொவிட்19 பாதிப்புகளுக்காக நிதி திரட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான் பாடல் ஒன்றைப் பாடினார். அந்தப் பாடலைப் பின்னர் தனது டுவிட்டர் தளத்திலும் பதிவேற்றினார்.
அந்தப் பாடலைத் தனது வீட்டின் ஒரு பகுதியில் இருந்து அவர் பாடுகிறார். இடையில் அவரது மகன் ஆப்ராம் உடன் சேர்ந்து பாடவும் ஆடவும் செய்கிறான்.
அந்தப் பாடலை ஷாருக்கான் பாடும் போது பின்னணியில் தெரியும் திறந்த அலங்கார அலமாரியின் தட்டுகளில் இடப்புறத்தில் இரண்டு விநாயகர் சிலைகளும் ஓம் என்னும் சின்னத்தைக் கொண்ட சிற்பம் ஒன்றும் இடம் பெற்றிருக்கின்றன. வலதுபுறத்தில் புனித திருக்குர் ஆன் நூல் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து ஷாருக்கானின் மத நல்லிணக்கப் போக்கு இணையவாசிகளிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஷாருக்கானின் மனைவி கௌரி ஓர் இந்து ஆவார். எனினும் அவர்கள் இருவரும் இணைந்து இனிமையான குடும்பத்தை நடத்தி வருவதோடு மூன்று பிள்ளைகளையும் கொண்டிருக்கின்றனர்.
எனினும் எந்த சமயத்திலும் அவர்கள் இருவரும் தங்களின் மதம் குறித்தோ, மத நம்பிக்கைகள் குறித்தோ பகிரங்கமாக கருத்துகள் எதனையும் வெளியிடுவதில்லை. பிள்ளைகளுக்கும் இரு மதத்தின் போதனைகளையும் சேர்த்தே கற்றுத் தருகிறோம் என்று ஒரு பேட்டியில் ஷாருக்கான் மனைவி கௌரி கூறியிருந்தார்.
ஷாருக்கான் பாடும் பாடலின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணையத் தளத்தின் வழி காணலாம்: