புதுடில்லி – எதிர்வரும் மே 7 தொடங்கி மே 13 வரை 64 விமானப் பயணங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் 15 ஆயிரம் இந்தியர்களைக் கொண்டு வர இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
இந்த விமானப் பயணங்களை ஏர் இந்தியா விமான நிறுவனமும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் மேற்கொள்கின்றன.
வான்போக்குவரத்து அமைச்சர் ஹர்டிப் சிங் புரி (படம்) இதனை இன்று செவ்வாய்க்கிழமை (மே 5) தெரிவித்தார்.
தனியார் விமான நிறுவனங்களும் இந்தப் பணியில் மே 13-க்குப் பிறகு இணைந்து கொள்ளலாம் என இன்று நடத்திய இணையம் வழியான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
எனினும் இந்தப் பயணங்களுக்கான கட்டணங்களை சம்பந்தப்பட்ட பயணிகள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நாடு திரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு, அடுத்த 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.
மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சுமார் 12 நாடுகளில் இந்தியர்கள் கொவிட்19 பாதிப்புகள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. எனினும் பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.