விசாகப்பட்டினம் – ஆந்திர மாநிலத்தின் கடலோர நகரமான விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவினால் நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இங்குள்ள எல்ஜி போலிமர்ஸ் இராசயனத் தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அருகிலிருந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கானோர் வாந்தி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்ற புகார்களோடு அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடியிருக்கின்றனர்.
இதுவரையில் சுமார் 800 பேர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
மரணமடைந்த 11 பேர்களில் ஒரு குழந்தையும் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ஓர் இராசயனக் கொள்கலன் நீண்டகாலமாக கவனிக்கப்படாமல் இருந்து வந்திருக்கிறது. இதிலிருந்து கசிந்த வாயு மற்ற இராசயனங்களோடு கலந்து விஷத்தன்மையோடு வெளியேறி அருகில் வசித்த பொதுமக்களைப் பாதித்திருக்கிறது.
எல்ஜி நிறுவனத்தின் நிர்வாகத்தினரை விசாகப்பட்டினம் விமான நிலைய விருந்தினர் அறையில் சந்தித்து ஆந்திராவின் முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி விளக்கங்கள் கோரியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இந்த நச்சுவாயுவை முறிக்கும் 500 கிலோ எடையுள்ள இராசயனங்கள் குஜராத்தின் இராசயனத் தொழிற்சாலையில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்தத் தகவலை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இராசயனத் தொழிற்சாலை மீது காவல்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.