கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டி தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தேசித்துள்ளதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மார்ச் 4-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், தற்போதைய நிலைமை நியாயமான விசாரணைக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்று நஜிப் கூறியுள்ளார்.
பிப்ரவரி பிற்பகுதியில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நஜிப்புக்கு எதிரான 2.28 பில்லியன் 1எம்டிபி ஊழல் வழக்கு இன்று மீண்டும் தொடங்கிய நிலையில், தலைமை வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராம், நஜிப்பின் அக்கூற்றானது முந்தைய விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்ற தோற்றத்தை அளிப்பதாக தெரிவித்தார்.
“இது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. இதன் பொருள், நீதிமன்றம், அரசாங்கத்தை மாற்றும் வரை நியாயமற்ற விசாரணையைக் கொண்டுள்ளது.”
“இந்த விசாரணையில் நீதிபதி கவனத்தை திசை திருப்ப நான் விரும்பவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையான குற்றச்சாட்டு என்பதால் அதை நான் பரிந்துரைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேரா முன் நடைபெறுகிறது.