கோலாலம்பூர்: கடந்த மே மாத நிலவரப்படி, கிட்டத்தட்ட 30,000 பாதிக்கப்பட்ட மற்றும் வேலையற்ற தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தக்கவைப்பு திட்டத்தின் (ஈஆர்பி) வாயிலாக பயனடைந்துள்ளனர்.
இதில் மொத்தம் 130 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
உற்பத்தி, தங்குமிடம் மற்றும் சுற்றுலா ஆகிய மூன்று துறைகளும் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும், வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயமும் உள்ளது என்று அவர் கூறினார்.
“இந்த துறைகளை, குறிப்பாக தங்குமிடம் மற்றும் சுற்றுலாவை மீட்டெடுக்க அதிக நாட்கள் ஆகலாம்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தங்கும்விடுதி மற்றும் சுற்றுலாத் துறை ஊழியர்களுக்கு திறன் பயிற்சி உள்ளிட்ட வாய்ப்புகள் பல்வேறு அமைச்சகங்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வடக்கு மண்டலத்தில் குறிப்பாக பேராக்கில் சமூக மறுவாழ்வு மையத்தை நிர்மாணிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
“இது முன்னாள் மனிதவள அமைச்சரின் முன்முயற்சி என்றாலும், புனர்வாழ்வு தேவைப்படும் மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு சிறந்த அணுகுமுறையாக இதை நான் காண்கிறேன், எனவே, நாங்கள் அதனைத் தொடர்வோம்.” என்று அவர் கூறினார்.