Home One Line P2 தாக்குதல் எதிரொலி : இந்திய ரயில்வேயின் 4.7 பில்லியன் ரூபாய் குத்தகையை இழந்த சீனா

தாக்குதல் எதிரொலி : இந்திய ரயில்வேயின் 4.7 பில்லியன் ரூபாய் குத்தகையை இழந்த சீனா

1131
0
SHARE
Ad

புதுடில்லி – இந்திய-சீன எல்லையில் நிகழ்ந்த மோதல்கள், உயிரிழப்புகளைத் தொடர்ந்து இதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்திருந்தார். உயிரிழந்த 20 இந்திய இராணுவத்தினரின் மரணங்கள் வீணாகிவிடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சீன-இந்திய தூதரக உறவுகளிலும், வணிகப் பரிமாற்றங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

முதல் அதிரடி முடிவை இந்திய ரயில்வே தற்போது எடுத்துள்ளது. தனது இரயில் தடத்தில் சமிக்ஞைகளைப் பொருத்தும் குத்தகையை பெய்ஜிங் நேஷனல் இரயில்வே ரிசெர்ச் அண்ட் டிசைன் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்திற்கு இந்திய இரயில்வே வழங்கியிருந்தது. 2016-இல் வழங்கப்பட்டிருந்த இந்த குத்தகையின் மதிப்பு 4.71 பில்லியன் ரூபாய்களாகும்.

#TamilSchoolmychoice

கான்பூர் மற்றும் டீன் தயாள் உபத்யாய் இடையிலான 417 கிலோமீட்டர் தூரம் கொண்ட இரயில் பாதையில் சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்புக்கான குத்தகையை பெய்ஜிங் நிறுவனம் பெற்றிருந்தது.

எனினும் குத்தகை இரத்து செய்யப்பட்டதற்கு எல்லைத் தாக்குதல் காரணமாகக் கூறப்படவில்லை. நான்கு ஆண்டுகளில் 20 விழுக்காடு பணிகளை மட்டுமே சீன நிறுவனம் நிறைவு செய்திருக்கிறது என்ற காரணத்தை இந்திய இரயில்வே கூறியிருக்கிறது.

இந்தக் குத்தகை முழுமையாக இரத்து செய்யப்பட உலக வங்கியின் ஆட்சேபணையில்லை என்ற ஒப்புதல் கடிதம் முதலில் பெறப்பட வேண்டும்.

இனி இந்திய அரசாங்கம் சீன நாட்டுடனான வணிக ரீதியாக தொடர்புகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 100 சீன உற்பத்திப் பொருட்கள் தரம் குறைந்தவை பட்டியலில் சேர்க்கப்பட்டு அவற்றுக்குத் தடை விதிக்கப்படலாம். சீனாவின் பல முதலீடுகள் தடைகளை எதிர்நோக்கும். குறிப்பாக 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் செயல்படுத்த சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்தத் தகவல்களை இந்திய அரசு அதிகாரிகள் மறைமுகமாக தெரிவித்திருக்கின்றனர். எனினும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில் சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தையும் இந்திய வணிகர்கள் தேசிய அளவில் தொடக்கியிருக்கின்றனர். 70 மில்லியன் உள்நாட்டு வணிகர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தைத் தொடக்கியிருக்கிறது.

உள்நாட்டுப் பொருட்களின் விற்பனைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சீனப் பொருட்களை அடையாளம் காணும் நடவடிக்கைகைய இந்திய நிதி அமைச்சும், வாணிப அமைச்சும் கூட்டாகத் தொடங்கியுள்ளன.