புதுடில்லி – சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான வணிகப் போர் ஒன்றை இந்திய அரசாங்க அமைப்புகளும், சமூக, வணிக அமைப்புகளும் தொடங்கியுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கண்டனக் குரல்கள் இந்தியா எங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சீன எல்லைப் பிரச்சனையை அவர் முறையாகக் கையாளவில்லை. சீனாவுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு எடுக்கத் தயங்குகிறார். உண்மை நிலவரங்களை மறைக்கிறார். இப்படியாக பாஜகவுக்கு எதிரான அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்காக குற்றச் சாட்டுகளை சுமத்தி வருகிறது.
முதல் கட்டமாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் சீனப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து சீன அரசாங்கம் சீனப் பொருட்களுக்கு எதிரான பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தயாராகி வருகிறது.
சீனப் பொருட்கள் இந்தியத் துறைமுகங்களில் தேக்கம்
கடந்த இரண்டு நாட்களாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இந்தியத் துறைமுகங்களில் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேங்கிக் கிடக்கும் பொருட்களில் அமெரிக்க வணிக முத்திரை கொண்ட தயாரிப்புகளாக ஆப்பிள், சிஸ்கோ, டெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களும் அடக்கம். இதுதான் புதிய சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் தயாரிப்பு செலவினங்களைக் குறைக்கும் வகையில் அவற்றை சீனாவில் தயாரிக்கின்றன. சீனாவில் இந்தப் பொருட்களுக்கு இருக்கும் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் அண்டை நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சில நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து இந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை விட, சீனா போன்ற உற்பத்தி நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்வது எளிதான செயலாகும். போக்குவரத்துச் செலவினங்களும் குறையும்.
எல்லைப் போர் பிரச்சனையால் சீனா எடுத்திருக்கும் இந்த முடிவால் சீனா பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பொருட்கள் அமெரிக்கப் பொருட்கள் என்றாலும் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இவற்றை சீனப் பொருட்களாக வகை செய்து இந்தியா கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் அமெரிக்கா தனது தயாரிப்பு மையமாக சீனாவைத் தவிர்க்கும் முடிவை எடுக்கக் கூடும்.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக கடுமையான வணிகப் போரை நடத்தி வருகிறார்.
ஜப்பானும், கொவிட்-19 பாதிப்பால் தனது பொருட்களுக்கான மையமாக சீனாவை முன்னிறுத்தாது தென்கிழக்காசிய நாடுகளை நோக்கி நகரும் முடிவை அறிவித்திருக்கிறது.
அமெரிக்க அமைப்பு தலையிட்டது
இந்தியாவின் முடிவைத் தொடர்ந்து அமெரிக்காவில் இயங்கும் அமெரிக்கா-இந்தியா வியூகக் கூட்டணி அமைப்பு (The US-India Strategic Partnership Forum) இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. ஜூன் 23 தேதியிட்டு இந்திய வர்த்தக அமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவான விளக்கங்களும், நடைமுறைகளும் இந்தியா சார்பில் வழங்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. இல்லையேல் வணிக மற்றும் உற்பத்தித் துறைகள் பாதிக்கப்படும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
தற்போதைக்கு சீனாவிலிருந்து வரும் பொருட்கள் என்ற அடிப்படையில் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் இந்தியா கடுமையானக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியிருக்கிறது.
எந்த துறைமுகங்களில் சீனப் பொருட்கள் முடக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரங்களும் வெளியிடப்படவில்லை.
எனினும், போர்ட் கார் நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்ட தமது கார் உபரிப் பாகங்கள் சென்னைத் துறையில் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
இதற்கிடையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னியல் மற்றும் கைத்தொலைபேசி தொழில் துறை பொருட்கள் புதிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் முன் அறிவிப்பு வழங்கியிருக்கிறது.
ஆனால் இதற்கு முன்னர் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி இத்தகைய பொருட்கள் இந்திய அரசு இலாகாக்களால் குறிப்பாக சுங்க இலாகாவால் அனுமதிக்கப்பட்டன.
சீனா மீது இந்தியா தொடங்கியிருக்கும் இந்த புதிய வணிகப்போர் தொடர்ந்து நீடிக்குமா? அதனை இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியுமா? என்பதே தற்போது எழுந்திருக்கும் கேள்வி!